மதுரை: தமிழகத்தில் அரசியல் கொலைகள் மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. அரசியல் கட்சித் தலைவர்கள் மர்மமான முறையில் கொல்லப்படுகின்றனர். நெல்லை காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் கொலை வழக்கில் இன்னும் குற்றவாளியைக் கண்டுபிடிக்கவில்லை.
கடந்த 4 நாட்களுக்கு முன்புசேலத்தில் மாநகராட்சி முன்னாள்மண்டலக் குழுத் தலைவர் சண்முகம் கொலை செய்யப்பட்டார். சென்னையில் பகுஜன் சமாஜ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டுள்ளார். மக்களுக்கு மட்டுமின்றி, அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் பாதுகாப்பில்லை.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு என்பது கட்சித்தலைமையின் முடிவு. ஜெயலலிதாஇருந்தபோது 5 தொகுதி இடைத்தேர்தல்களைப் புறக்கணித்துள்ளோம். கருணாநிதியும் புதுக்கோட்டை தொகுதி இடைத்தேர்லைப் புறக்கணித்துள்ளார்.
விக்கிரவாண்டி தொகுதியில் அமைச்சர்கள் முகாமிட்டு, பணம்,பரிசுப் பொருட்களை வழங்குகின்றனர். அங்கு தேர்தல் சுதந்திரமாக நடக்கவேண்டும்.
ஓபிஎஸ் அதிமுகவில் சேர நினைக்கலாம். ஆனால், அதில் கட்சித் தலைமைக்கு உடன்பாடு இல்லை. அவர் கட்சிக்கு விசுவாசமாக இருந்ததில்லை. எனவே, அவர் அதிமுகவில் இணைய ஒரு சதவீதம்கூட வாய்ப்பில்லை.
அண்ணாமலை பச்சோந்தியைப் போன்றவர். துரோகத்தின் மொத்தஉருவமே அவர்தான். கீழ்த்தரமாக,அவதூறாக எங்களது தலைவர்களை விமர்சித்தால், நாங்கள் எப்படி பொறுத்துக்கொள்வோம்? கட்சித் தலைவர் பதவிக்கு அண்ணாமலை பொருத்தமில்லாதவர். நாங்கள் அவரைப்போல் நியமிக்கப்பட்டு, கட்சியில் பதவிக்கு வரவில்லை.
கள்ளச் சாராய விவகாரத்தில் மாநில அரசு விசாரித்தால் உண்மை குற்றவாளிகள் தண்டிக்கப்பட மாட்டார்கள். எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது சிவில் வழக்கு. ஆனால், அவர்மீது வீண் பழி சுமத்தி, காவல்துறையினர் அவரைத் தேடுகின்றனர். தமிழகத்தில் படிப்படியாக பூரண மது விலக்கை கொண்டு வர வேண்டும். இவ்வாறு பழனிசாமி கூறினார்.
முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன், செல்லூர் கே. ராஜு, வளர்மதி, ஆர்.பி. உதயகுமார் மற்றும் ராஜன் செல்லப்பா எம்எல்ஏ உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு: ஓபிஎஸ் - முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சிவகங்கையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறும்போது, ‘‘தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளதற்கு, ஆம்ஸ்ட்ராங் கொலையே உதாரணம். ஆம்ஸ்ட்ராங் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதிமுகவை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது. கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவு சரியாகிவிடும். விரைவில் அனைவரும் ஒன்றிணைவோம்’’ என்றார்.