எஸ்ஐ தேர்வு மட்டுமின்றி அனைத்து தேர்வுகளையும் எழுதுங்கள்: இளைஞர்களுக்கு கூடுதல் டிஜிபி அறிவுரை @ மதுரை 


மதுரை: மதுரையில் கணியன் குழுமம் சாரபில், எஸ்ஐ பணிக்கான எழுத்துத்தேர்வு குறித்து இளைஞர்களுக்கு இலவச ஆலோசனை, வழிகாட்டுதல் இன்று (ஜூலை 7) நடந்தது. சிறப்பு விருந்தினராக கூடுதல் டிஜிபி செந்தாமரைக் கண்ணன் பங்கேற்று பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

நிகழ்வில் அவர் பேசியதாவது: “நாங்கள் படித்த காலத்தில் இது போன்ற பயிற்சி மையம், ஆலோசனை முகாம், வழிகாட்ட யாருமே இல்லை. நான் +2வில் 48% மதிப்பெண் தான் எடுத்தேன். நானாக சுயமுயற்சி எடுத்து ஸ்போர்ட்ஸ் ஒதுக்கீட்டின் அடிப் படையில் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் சேர்ந்தேன்.

எம்ஏ, எம்பில் படிக்கும்போது, நானாகவே கடும் முயற்சி எடுத்து படித்தேன். இதன்மூலம் படிப்பில் தங்கப் பதக்கம் வென்றேன். இதன்மூலம் கல்லூரி ஆசிரியர் பணி வாய்ப்பு கிடைத்தது. காவல் துறைக்கு வந்தது கூட யதார்த்தமானது. கோல்டு மெடல் எனக்கு காவல்துறை பணி வாய்ப்பை பெற்று கொடுத்தது.

வீரப்பன் தேடுதல் பணி எனக்கு தரப்பட்டது. கடமையாக செய்யாமல் கடுமையாக பணி செய்து முடித்தோம். போலீஸ் லஞ்சம் வாங்க மக்களே காரணம். முதலில் கொடுப்பதை நிறுத்துங்கள். லஞ்சம் கேட்டா எதிர்த்து கேள்வி கேளுங்கள். அது குறையும்.

காவல் துறையில் மட்டும் தான் தப்பு செய்வோர் உடனே வீட்டுக்கு அனுப்பப் படுகின்றனர். எனது பணிக்காலத்தில் அதிகமாக பணிமாற்றம் செய்யப் பட்டிருக்கிறேன். தவறு செய்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுத்துள்ளேன்.
குறிப்பாக காவல்துறையில் பெண்களுக்கு நிறைய வாய்ப்பு உண்டு.

எஸ்ஐ தேர்வு மட்டுமின்றி எல்லா தேர்வையும் இளைஞர்கள் எழுதவேண்டும். பயிற்சி மையம் ஆரம்ப காலத்தில் தேவை. போலீஸ் வேலை வாங்கி தருவதாக சொல்லும் யாரையும் நம்பி ஏமாற வேண்டாம்” இவ்வாறு செந்தாமரைக் கண்ணன் தெரிவித்தார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வழக்கறிஞர் உபன்யாஸ் சரவணகுமார் செய்திருந்தார்.

x