புதுச்சேரி: கிஸ்தி தொகை குறைப்புக்கு பிறகு எல்லையோர சாராயக்கடைகளை ஏலம் எடுக்க போட்டி


பிரதிநிதித்துவப் படம்

புதுச்சேரி: கிஸ்தி தொகை குறைப்புக்கு பிறகு எல்லையோர சாராயக்கடைகளை ஏலம் எடுக்க கடும்போட்டி நிலவியது. மீதமுள்ள சாராய, கள்ளுக்கடைகளுக்கு நாளை மறு ஏலம் நடக்கிறது.

புதுச்சேரியில் 85 சாராயக்கடைகளும், 66 கள்ளுக்கடைகளும் உள்ளன. இதேபோல், காரைக்காலில் 25 சாராயக்கடைகளும், 26 கள்ளுக்கடைகளும் உள்ளன. இந்த கடைகளுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை முழுமையான ஏலம் நடைபெறும். அதன்படி, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள சாராயம் கள்ளுக்கடைகளின் 2024-25ம் ஆண்டு குத்தகை ஆண்டுக்கான சில்லரை விற்பனை உரிமத்துக்கான ஏலம் இணையதளத்தில் கடந்த 29ந் தேதி தொடங்கிய்து. ஆனால் கிஸ்தி தொகை உயர்வு காரணமாக, சாராயக்கடைகளை ஏலம் எடுக்க வியாபாரிகள் முன்வரவில்லை.

அதன் பிறகு, சாராய கடைகளுக்கு 5 சதவீதம் கிஸ்தி தொகை குறைக்கப்பட்டு ஏலம் விடப்பட்டு வருகிறது.கிஸ்தி தொகை குறைப்புக்கு பின் சாராயக்கடையின் ஏலம் சூடுபிடித்துள்ளது. கடந்த வெள்ளி வரை புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 38 சாராயக் கடைகளும், 35 கள்ளுக் கடைகளும் ஏலம் எடுக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் ஏலம் போகாத 72 சாராயக்கடைகள் மற்றும் 57 கள்ளுக்கடைகளுக்கு சனிக்கிழமை மறு ஏலம் நடத்தப்பட்டது.

இதில் புதுவை 29, காரைக்கால் 1 என ஒரே நாளில் 30 சாராயக்கடைகள் ஏலம் போயின. புதுவையில் எல்லையோரத்தில் உள்ள சேதராப்பட்டு கடையை ஏலம் எடுக்க கடும் போட்டி நிலவியது. கடைசியில் சேதராப்பட்டு கடை அதிகபட்ச மாக ரூ.27,60,351க்கு ஏலம் எடுக்கப்பட்டது. இதற்கு அடுத்தபடியாக திருக்கனூர் கடை ரூ.14,52,783க்கும், கன்னியகோவில் கடை ரூ.13,03,877க்கும், லிங்காரெட்டிப்பாளையம் கடை ரூ.9.35 லட்சத்துக்கும், குருவிநத்தம் கடை ரூ.6,92,435க்கும் ஏலம் எடுக்கப்பட்டது.

இதில் குறைந்த பட்சமாக ஆரியபாளையம் கடை ரூ.1.54 லட்சத்துக்கு ஏலம் போனது. இதேபோல், புதுவை 1, காரைக்கால் 1என 2 கள்ளுக்கடைகள் ஏலம் போயின. அதிகபட்சமாக மணமேடு கடை ரூ.51,408க்கு ஏலம் எடுக்கப்பட்டது. புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள 110 சாராயக் கடைகளில் இதுவரை 68 கடைகளும். 92 கள்ளுக்கடைகளில் 37 கடைகளும் ஏலம் போயுள்ளன. இன்னும் ஏலம் போகாத 42 சாராயக்கடை கள், 55 கள்ளுக்கடைகளுக்கு நாளை (திங்கட்கிழமை ) கலால் துறை மூலம் மறு ஏலம் நடத்தப்படவுள்ளது.

x