கேரளாவுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்வதை எதிர்த்து போராட்ட அறிவிப்பு - தென்காசியில் போலீஸ் குவிப்பு


தென்காசி: கேரளாவுக்கு கனிம வளங்கள் கொண்டுசெல்வதைத் தடுக்கக் கோரி தென்காசியில் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என எச்சரித்த காவல்துறை, பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் இருந்து ஏராளமான கனரக லாரிகளில் அண்டை மாநிலமான கேரளாவுக்கு எம் சாண்ட், ஜல்லி, கல் போன்ற கனிமவளங்கள் கொண்டுசெல்லப்படுகின்றன.

இதனால் சாலைகள் மற்றும் குடிநீர் குழாய்கள் சேதமடைவதாகவும், அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாகவும் அரசியல் கட்சியினர் மற்றும் சமூக அமைப்பினர் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும், கேரளாவுக்கு கனரக வாகனங்களில் கனிமவளங்கள் கொண்டு செல்வதைத் தடுக்க வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கேரளாவுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்வதைத் தடுக்கக் கோரி தென்காசி வாய்க்கால் பாலம் அருகே பொருட்காட்சி திடலில் இன்று போராட்டம் நடைபெற இருப்பதாகவும், இதில் பொதுமக்கள் திரளாக கலந்துகொள்ளுமாறும் சமூக வலைதளங்களில் அழைப்பு விடுக்கப்பட்டது. எந்த கட்சி, அமைப்பின் பெயரும் இல்லாமல் இந்த போராட்ட அறிவிப்பு பரவியது.

இதையடுத்து, போராட்டம் நடத்த காவல்துறையினரிடம் எந்த ஒரு முறையான அனுமதியும் பெறவில்லை என்றும், உரிய அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.பி.சுரேஷ்குமார் எச்சரிக்கை விடுத்தார்.

போராட்டத்தைத் தடுக்க தென்காசி வாய்க்கால் பாலம் அருகே ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர். மேலும், தென்காசிக்கு வரும் எல்லைகளில் போலீஸார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட வந்த 6 பேரை போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

x