கன்னியாகுமரி மாவட்டம், மணவாளக்குறிச்சியில் மத்திய அரசின் கீழ் இயங்கும் அரியவகை மணல் ஆலை உள்ளது. இந்த ஆலைக்கு கூடுதலாக 1,164 ஹெக்டேர் பரப்பில் தாது மணல் எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது மத்திய அரசு. அதற்கு தமிழக அரசும் தடையில்லாச் சான்று வழங்கியிருப்பதை அறிந்து கடலோர கிராமங்கள் கொந்தளிப்பில் இருக்கின்றன.
தாதுமணல் பிரித்தெடுப்பால் கடலோர கிராமங்களில் புற்று நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பது மீனவர்களின் நீண்ட நாளைய அச்சம். இந்த நிலையில் அரசின் தற்போதைய முடிவு அவர்களை மேலும் அச்சத்தில் ஆழ்த்தி இருக்கிறது. முதலில் பொதுத்துறை நிறுவனத்திற்கு அனுமதிகொடுத்துவிட்டு மெல்ல மெல்ல தனியாரையும் தாது மணல் அள்ள அனுமதிப்பதற்கான முன்முயற்சியே இது என ஆளும் திமுகவை நோக்கிப் பாய்கின்றனர் மீனவர்கள்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய நெய்தல் மக்கள் இயக்கத்தின் குமரி மாவட்டச் செயலாளர் குறும்பனை பெர்லின், “மணவாளக்குறிச்சி கிராமம் கயிறுக்குப் பேர் பெற்றது. இங்கிருந்து அந்தக் காலத்தில் கப்பல் மூலம் வெளிநாடுகளுக்கு கயிறு ஏற்றுமதி செய்யப்பட்டது. அப்படிச் சென்ற கயிற்றில் ஒட்டியிருந்த மணவாளக்குறிச்சி மணலைப் பார்த்த ஜெர்மானியர்கள் அதில் அரிய தாது இருப்பதைக் கண்டுபிடித்து இங்கு வந்தனர்.
1909-ல் ஜெர்மனியர்கள் தான் இங்கு முதன் முதலில் தாது மணல் பிரித்தெடுக்கும் ஆலையை நிறுவினார்கள். நாடு விடுதலைப் பெற்ற பின்பு 1965-ல் அது பொதுத்துறை நிறுவனம் ஆனது. இயந்திரங்களைப் பயன்படுத்தாமல் ஆட்களைக் கொண்டே இந்த ஆலைக்காக மணல் எடுக்கப்படுகிறது. ஆனால், கதிரியக்கம் கொண்ட தாது மணலை அள்ளும் பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு தகுந்த பாதுகாப்புவசதிகள்கூட செய்யப்படுவதில்லை.
தாது மணல் ஆலையால் புற்றுநோய் பெருக்கம் தொடங்கி கடலரிப்பு வரை பல்வேறு பிரச்சினைகள் கடலோர கிராமங்களில் நிலவி வருகிறது. பல்வேறு வகையான உடல் உபாதைகளால் கடலோர மக்கள் தவித்து வருகின்றனர். இதையெல்லாம் அனுபவபூர்வமாக உணர்ந்ததாலேயே மிடாலம், மேல்மிடாலம், கொட்டில்பாடு, புதூர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள், நாங்கள் மணல் அள்ளித்தர மாட்டோம் என முடிவு செய்தார்கள். ‘நீங்கள் வராவிட்டால் இயந்திரங்களைக் கொண்டு அள்ளுவோம்’ என சின்னவிளை, பெரியவிளை கிராமங்களின் மக்களை மிரட்டி, அவர்களுக்கு சில சலுகைகளையும் அளித்து பணியவைத்துவிட்டார்கள்.
மணவாளக்குறிச்சி மணல் ஆலைக்கு கடந்த 2013-ம் ஆண்டே மணல் எடுக்கும் அனுமதி முடிவடைந்துவிட்டது. இதனிடையே தமிழகத்தில் தாது மணல் கொள்ளையை கணக்கெடுக்க ககன் தீப்சிங் பேடி தலைமையில் 2016-ல் ஆய்வுசெய்யப்பட்டு தனியார் தாது மணல் ஆலைகள் அனைத்தும் மூடப்பட்டது. 5 ஆண்டுகள் வரை மணவாளக்குறிச்சி மணல் ஆலையும் மூடித்தான் கிடந்தது. அதன் பின்பு மீண்டும், பொதுத்துறை நிறுவனமான மணவாளக்குறிச்சி மணல் ஆலையில் தற்காலிக பாஸ் வழங்கப்பட்டு மண் அள்ளப்பட்டு வருகிறது.
ஆலைதரப்பு மணல் அள்ளிக்கொண்டிருக்கும் பகுதியில் கனிமவளம் குறைந்துவிட்டதால், புதிதாக கூடுதல் இடங்களில் மணல் அள்ள அனுமதி கேட்டார்கள். ஆனால் அதிமுக அரசு கொடுக்கவில்லை. அப்படி இருக்கையில், திமுக அரசு இப்போது அந்த அனுமதியைக் கொடுத்திருக்கிறது” என்றார்.
தொடர்ந்து பேசிய பெர்லின், “கடந்த ஆண்டு ஜூலையிலேயே கூடுதலான இடங்களில் தாது மணல் அள்ள அனுமதியைக் கொடுத்துவிட்டு திமுக அரசு மெளனமாக இருந்துள்ளது. இப்போது தான் அது வெளியில் கசிகிறது. கீழ்மிடாலம் ஏ வருவாய் கிராமம், மிடாலம் பி வருவாய் கிராமம், இணையம்புத்தன் துறை வருவாய் கிராமம், ஏழுதேசம் ஏ,பி,சி வருவாய் கிராமங்கள், கொல்லங்கோடு ஆகிய பகுதிகளில் புதிதாக இப்போது தாது மணல் எடுக்க அனுமதி கொடுத்துள்ளனர். இங்கெல்லாம் கனிமங்கள் தீரும்வரை தாது மணல் எடுத்துக் கொள்ளலாம் என்ற நிபந்தனையுடன் இதற்கான அனுமதியைப் பெற்றுள்ளனர்.
மலைகளில் இருந்து ஆறுகள் வழியாக கடலுக்கு அடித்து வரப்படும் தாது மணலை கடல் தான் மீண்டும் கரைக்குத் தள்ளுகிறது. கதிர்வீச்சு அதிகம் உள்ள இந்த மணலிலிருந்து தாதுக்களைப் பிரிக்கும் போது அதன் கதிரியக்கத்தன்மை இன்னும் அதிகமாகிவிடுகிறது. அதனால் தான் இந்தப் பகுதியில் வசிக்கும் மக்களில் பெருவாரியானவர்களுக்கு புற்று நோய் பாதிப்புகள் ஏற்படுகிறது. எனவே, புதிதாக வேறு இடங்களில் தாது மணலை அள்ள அனுமதியளிக்கும் முன்னதாக இந்தப் பகுதியில் நிலவும் புற்று நோய்த் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய வேண்டும். அதற்கு இங்கே புற்று நோய் ஆராய்ச்சி மையத்தை அமைக்க வேண்டும் என்பது மீனவர்களின் கோரிக்கையாக இருக்கிறது.
‘கடலோர அமைதி மற்றும் வளர்ச்சிக் குழு’ அங்கத்தினர்கள் உள்பட மீனவப் பிரதிநிதிகள் சேர்ந்து குமரி மாவட்ட ஆட்சியரை சந்தித்து இதுகுறித்துப் பேசினோம். அவரோ, ‘தாது மணல் எடுக்க அனுமதி கொடுத்திருக்கிறார்களா?’ என எங்களையே திருப்பிக் கேட்கிறார். இதே பதிலையே அமைச்சர் மனோ தங்கராஜூம் சொன்னார். என்றாலும், ‘மக்கள் அரசு மீனவர்களின் கோரிக்கைக்கு துணை நிற்கும்’ என ஆறுதல்வார்த்தை மட்டும் அமைச்சர் சொன்னார்.
புதிதாக இந்தப் பகுதியில் தாது மணல் எடுக்க தமிழக அரசு தடையில்லா சான்று வழங்கியிருப்பதற்கான ஆதாரங்கள் எங்களிடம் இருக்கிறது. இவ்விஷயத்தில் அரசு தரப்பில் கடுகளவும் வெளிப்படைத்தன்மை இல்லை. அரசு இனியும் இந்த விஷயத்தில் எங்களுக்கு எதிராகச் செயல்படுமானால் கூடங்குளம், ஸ்டெர்லைட், கன்னியாகுமரி சரக்குப்பெட்டக முனையம்போல் இதிலும் அரசுக்கு எதிரான எங்களின் எதிர்ப்பைக் காட்டவேண்டியதிருக்கும்” என்றார்.
இதுகுறித்து மணவாளக்குறிச்சி அரியவகை மணல் ஆலை அதிகாரிகளிடம் பேசினோம். “இயற்கையாகவே அதிகக் கதிரியக்கம் கொண்ட தாது மணலை நிலையான அபிவிருத்தி மற்றும் சுற்றுப்புறச் சூழலுக்கு உகந்த முறையில் எடுப்பதனால் அப்பகுதியில் கதிரியக்கத்தின் அளவு பல மடங்கு குறைக்கப்பட்டு வருகிறது. குமரி மாவட்ட கடலோரங்களில் கிடைக்கும் இந்த அரிய மணலில் இருந்து மோனோசைட் என்ற கதிரியக்கம் கொண்ட தாதுவை தனியாகப் பிரித்தெடுத்து ஒடிசாவுக்குத்தான் நாங்கள் அனுப்புகிறோம். அங்குதான் மோனோசைட்டில் இருந்து கதிரியக்கப் பொருள்கள் தனித் தனியாக பிரித்து எடுக்கப்பட்டு அதை எரிசக்தி, அணுசக்தி, செல்போன் உற்பத்தி, கார் உற்பத்தி என பல்வேறு துறைகளுக்கும் பயன்படுத்துகிறார்கள். ஆகவே, கதிரியக்கம் கொண்ட மோனோசைட்டை தாது மணலில் இருந்து பிரித்தெடுப்பதால் இந்தப் பகுதியில் உள்ள கதிரியக்கத்தின் அளவு குறையத்தான் செய்யுமே தவிர அதிகரிக்க வாய்ப்பில்லை” என்றவர்கள், புதிதாக வேறு இடங்களில் தாது மணல் எடுக்க அனுமதியளிக்கப்பட்டிருக்கும் விஷயம் குறித்து கேட்டதற்கு, “அதுகுறித்து மத்திய, மாநில அரசுகளிடம்தான் கேட்கவேண்டும்” என முடித்துக்கொண்டனர்.
போராட்டமே வாழ்க்கையாக பழகிவிட்ட குமரி மாவட்ட மீனவர்கள், குறைந்தபட்சம் தங்களின் கருத்தைக்கூட கேட்காமல் தங்கள் கிராமங்களில் தாது மணல் அள்ள தமிழக அரசு தடையில்லாச் சான்று வழங்கியிருப்பதைக் கண்டித்தும் போராட்டத்தில் குதிக்கத் தயாராகி வருகிறார்கள் என்பது லேட்டஸ்ட் தகவல்!