மதுரை எம்பி சு.வெங்கடேசன் மீனவர்கள் பிரச்சினை குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு, இந்தியா - இலங்கை மீனவர்கள் பிரச்சினை உட்சபட்ச மட்டங்களில் விவாதிக்கப்பட்டுள்ளன. விரைவில், இலங்கை சிறையில் உள்ள அனைவரும் இந்தியாவிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய இணையமைச்சர் பதிலளித்துள்ளார்.
``மீன் பிடிப்பதற்கான ஆண்டு தடைக் காலம் ஜூன் 15 அன்று முடிந்த பின்னரும் தமிழ்நாடு, புதுச்சேரி மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை விடுவிக்க என்ன முயற்சிகள் அரசின் தரப்பில் மேற்கொள்ளப்பட்டன? மார்ச் 22-ம் தேதியன்று நடைபெற்ற இரு நாடுகளின் கூட்டு செயல்பாடு குழுவில் இது குறித்து விவாதிக்கப்பட்டதா? ஏதேனும் திட்டவட்டமான தீர்வுக்கான முன் மொழிவுகள் ஏதும் அங்கு வைக்கப்பட்டனவா?'' என சு. வெங்கடேசன் எம்.பி நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த, வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளீதரன், "சர்வதேச கடல் எல்லையைக் கடப்பதாகவும், இலங்கை கடற் பகுதியில் மீன் பிடிப்பதாகவும் குற்றம் சாட்டி இந்திய மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுகிறார்கள்.
இதுவரை உள்ள தகவல்களின் படி 2022-ல் மட்டும் இதுநாள் வரை 144 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில், 29 பேர் ஜூன் 15-க்கு பின்னர் கைது செய்யப்பட்டுள்ளனர். நான்கு தனித்தனி நிகழ்வுகளாக 12 மீனவர்கள் ஜூலை 3-ம் தேதியும், 5 பேர் ஜூலை 4-ம் தேதியும், 6 பேர் ஜூலை 11-ம் தேதியும், 6 பேர் ஜூலை 11-ம் தேதியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து, அரசின் முயற்சியால் 144 பேரில் 138 பேரின் விடுதலை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், 138 பேரில் 115 பேர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர். 23 பேர் விரைவில் அழைத்து வரப்படுவார்கள். தற்போது, 6 பேர் இலங்கை சிறையில் உள்ளனர். அவர்கள் ஜூலை 20 அன்று கைது செய்யப்பட்டவர்கள். அவர்களையும், மீட்டு கொண்டு வருவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது'' என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "இந்திய மீனவர்கள் பிரச்சினை உட்ச பட்ச மட்டங்களில் விவாதிக்கப்பட்டுள்ளன. இரு நாட்டு பிரதமர்கள் இடையில் செப்டம்பர் 20, 2020-ல் நடந்த இரு தரப்பு பேச்சுவார்த்தையின் போது இருநாட்டு மீனவர் பிரச்சினை குறித்து பேசப்பட்டது. 2021 ஜனவரி 5 முதல் 7 வரை இந்திய வெளியுறவு அமைச்சரின் இலங்கை பயணத்தின் போதும், இலங்கை மீன் வள அமைச்சருடன் நடந்த பேச்சு வார்த்தைகளில் இந்திய மீனவர்கள் குறித்த அனைத்து பிரச்சினைகளும் விவாதிக்கப்பட்டது" என தெரிவித்தார்.
மேலும், ஜனவரி 10, 2022 அன்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் இலங்கை நிதி அமைச்சர் உடனான மெய் நிகர் சந்திப்பில், இலங்கை சிறையில் உள்ள இந்திய மீனவர்களின் விடுதலையை விரைவு செய்ய வேண்டுமென்று விவாதிக்கப்பட்டதாகவும் என்று கூறினார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மதுரை எம்.பி.சு.வெங்கடேசன், `அமைச்சரின் பதில், அரசு எடுத்துள்ள முயற்சிகளை விவரித்தாலும் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் தொடர் கதையாகவே உள்ளது. மேலும், ஒன்றிய அரசு இன்னும் அரசு முறை முயற்சிகளை தீவிரமாக்கி இலங்கை கடற்படையின் அராஜகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தற்போது, சிறையில் உள்ள 6 தமிழ் மீனவர்களும் விரைவில் விடுதலை ஆக வேண்டும். விடுவிக்கப்பட்ட 23 பேர் விரைவில் வீடு திரும்ப வேண்டும்' என்றார்.