தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் விரைவில் மாற்றம்: செல்வப்பெருந்தகை தகவல்


செல்வப்பெருந்தகை

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸில் விரைவில் மாவட்டத் தலைவர்கள், மாநில நிர்வாகிகள் மாற்றப்பட இருப்பதாக மகளிரணி செயற்குழு கூட்டத்தில் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் மகளிரணி செயற்குழு கூட்டம், மகளிரணி தலைவி அசினா சையத் தலைமையில் சென்னை சத்திய மூர்த்தி பவனில் நேற்று நடைபெற்றது. அதில் பங்கேற்ற கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை பேசியதாவது:

போட்டியிட முன்னுரிமை: காங்கிரஸ் 139 ஆண்டுகளாக குரலற்றவர்களின் குரலாக ஒலித்து வரும் பழமையான கட்சி. பெண்கள் முயன்றால் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம். ஒவ்வொரு நிர்வாகியும், அவரவர் மாவட்டங்களில், மாவட்ட தலைவருக்கு இணையாக கூட்டங்கள் நடத்துவது, ஆர்ப்பாட்டங்கள் அறிவிப்பது, கிராமப்புறங்களுக்கு சென்று தொண்டர்களைச் சந்திப்பது என கட்சியைப் பலப்படுத்தும் பணியில் ஈடுபட வேண்டும்.

அவர்களுக்கு நிச்சயம் சட்டப்பேரவை மற்றும் மக்களவை தேர்தலில் போட்டியிட முன்னுரிமை அளிக்கப்படும். விரைவில் மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள் மாற்றம் நடைபெற உள்ளது. அதில், கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபடும் மகளிருக்கு பொறுப்புகள் வழங்கப்படும். கட்சியை பலப்படுத் தும் பணியை மகளிர் கையில் எடுக்க வேண்டும். நீங்கள்தான் காங்கிரஸின் எதிர்காலம். இவ்வாறு அவர் கூறினார்.

தீர்மானங்கள் நிறைவேற்றம்: பின்னர் கூட்டத்தில், பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டை மத்திய அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். மகளிர் காங்கிரஸை வலிமைப்படுத்த செயல் திட்டம் வகுக்கப்படும். மத்திய பாஜக ஆட்சியில் தொடர்ந்து பெண்களுக்கு எதிராக வன்கொடுமை நடைபெறுவதற்கு கண்டனம் என்பன உள்ளிட்ட 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

x