வீட்டுக்கு கொண்டுசெல்லப்பட்டது ஆம்ஸ்ட்ராங் உடல் - கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தும் பொதுமக்கள் 


சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் உடல் அவரது உறவினர்களிடம் நேற்று இரவு ஒப்படைக்கப்பட்டது. அவரது உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக இருந்து வந்தவர் வழக்கறிஞர் ஆம்ஸ்ட்ராங் (54). சென்னை, பெரம்பூரில் வசித்து வந்த இவரை நேற்று முன்தினம் இரவு, மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்தனர். இந்த கொலை சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் உடல் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து அவரது ஆதரவாளர்கள் புடைசூழ அயனாவரம் இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. நள்ளிரவு 12.50 மணியளவில் அவரது உடல் வீட்டுக்கு வந்தடைந்தது. அங்கு அவரது உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அதன் பிறகு பெரம்பூரில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்தில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. தொடர்ந்து இன்று அவரது உடல் அடக்கம் செய்யப்படுகிறது. கட்சி அலுவலகத்தில் அவரது உடலை அடக்கம் செய்ய அனுமதி கோரி அவரது மனைவி பொற்கொடி தாக்கல் செய்த வழக்கு இன்று காலை விசாரணைக்கு வருகிறது.

நேற்று இரவு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் இருந்து ஆம்ஸ்ட்ராங்கின் உடல் கொண்டு செல்லப்பட்டது. அப்போது திரண்ட அவரது ஆதரவாளர்கள் 'வீர வணக்கம்', 'ஜெய் பீம்' என முழக்கமிட்டனர். அங்கே திரண்டிருந்த மக்கள் வெள்ளத்தில் ஆம்ஸ்ட்ராங்கின் உடல் கொண்டு செல்லப்பட்டது.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக, திருநின்றவூரைச் சேர்ந்த மூவர், காட்பாடியைச் சேர்ந்த இருவர் உட்பட 8 பேர் உட்பட இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

x