ஆம்ஸ்ட்ராங் படுகொலை அதிர்வுகள் முதல் தமிழக பாஜகவின் 7 தீர்மானங்கள் வரை | டாப் 10 விரைவு செய்திகள்


ஆம்ஸ்ட்ராங் படுகொலை - போலீஸ் நடவடிக்கை என்ன? பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவம் தொடர்பாக, திருநின்றவூரைச் சேர்ந்த மூவர், காட்பாடியைச் சேர்ந்த இருவர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கான காரணத்தைக் கண்டறிந்து, சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், உத்தரவின் பேரில் கூடுதல் காவல் ஆணையர் (வடக்கு) ஆஸ்ரா கர்க், தலைமையில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தீவிரமாக குற்றவாளிகளைத் தேடிவந்தனர்.

தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை செய்து மேற்படி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட காட்பாடியைச் சேர்ந்த பொன்னை பாலு (39), பெரம்பூரைச் சேர்ந்த திருமலை (45), திருவள்ளூர் ஆர்.கே.பேட்டை தாலுகாவைச் சேர்ந்த மணிவண்ணன் (26), குன்றத்தூரைச் சேர்ந்த திருவேங்கடம் (33), திருநின்றவூரைச் சேர்ந்த ராமு (எ) வினோத் (38), காட்பாடியைச் சேர்ந்த சந்தோஷ் (22), திருநின்றவூரைச் சேர்ந்த அருள் (33) மற்றும் செல்வராஜ் (48) ஆகிய 8 நபர்களை சனிக்கிழமை கைது செய்தனர்.

விசாரணையில் கைது செய்யப்பட்ட பொன்னை பாலு மீது 8 வழக்குகளும், திருமலை மீது 7 வழக்குகளும், திருவேங்கடம் மீது 2 வழக்குகளும் உள்ளது தெரியவந்தது. மேலும் திருமலை என்பவர் திரு.வி.க நகர் காவல் நிலைய சரித்திரப்பதிவேடு குற்றவாளி ஆவார். விசாரணைக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட 8 நபர்களும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

“அரசியல் தொடர்புக்கான சாத்தியம் குறைவு” - பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை தொடர்பாக, சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் கூறும்போது, “கொலைக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இது அரசியல் காரணங்களுக்கான கொலை இல்லை. அதற்கான சாத்தியம் மிகவும் குறைவாகவே உள்ளது. அவர் ஆரம்ப வாழ்க்கையில் இருந்து அரசியலுக்கு வந்த பிறகு, சில நேரங்களில் அவருக்கு பிரச்சினை இருந்துள்ளது. அரசியல் காரணங்கள் தாண்டி, குழு ரீதியான பிரச்சினை இருந்துள்ளது. எனவே, அந்தக் கோணத்தில்தான் நாங்கள் விசாரித்து வருகிறோம். அரசியல் காரணங்களுக்கு மிகக் குறைவான வாய்ப்பே உள்ளது” என்றார்.

“உண்மையான குற்றவாளிகள் இல்லை” - பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு விசிக தலைவர் திருமாவளவன் நேரில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்த கொலையின் பின்னணியில் உள்ள உண்மையான குற்றவாளிகளை கண்டறிவதற்கு உரிய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். இந்த கொலை வழக்கில் இப்போது சரண் அடைந்து இருப்பவர்கள், உண்மையான குற்றவாளிகள் இல்லை.

அந்தக் கொலையில் சம்பந்தப்பட்டவர்கள், அவர்களைத் தூண்டிவிட்டவர்கள், அனைவரும் கைது செய்யப்பட வேண்டும். ஆகவே, சரண் அடைந்தவர்களை கைது செய்துவிட்டோம் என்ற வகையிலே காவல் துறை புலன் விசாரணையை நிறுத்திக் கொள்ளக்கூடாது. இந்த கொலையின் பின்னணியில் இருந்தவர்கள், உண்மையான குற்றவாளிகள் யாரோ, அவர்களை கைது செய்ய வேண்டும் என்று பகுஜன் சமாஜ் , விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இங்கு திரண்டிருக்கும் அமைப்புகளின் சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கிறோம்” என்றார்.

“குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை தரப்படும்” - முதல்வர்: “பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியையும் பெரும் வருத்தத்தையும் அளிக்கிறது. கொலையில் சம்பந்தப்பட்டவர்களைக் காவல்துறை இரவோடு இரவாகக் கைது செய்திருக்கிறது. ஆம்ஸ்ட்ராங்கை இழந்து வாடும் அவரது கட்சியினர், குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, வழக்கை விரைவாக நடத்தி, குற்றவாளிகளுக்குச் சட்டப்படி உரிய தண்டனை பெற்றுத் தரக் காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்கேடு: கட்சிகள் சாடல்: “ஒரு தேசிய கட்சியின் மாநிலத் தலைவர் பொறுப்பில் உள்ளவர் படுகொலை செய்யப்படுகிறார் எனில், இதற்கு மேல் இந்த திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கை என்னவென்று சொல்லி விமர்சிப்பது? எதன் மீதும் அச்சமற்ற நிலையில் தொடர்ச்சியாக குற்றங்கள் நடைபெறும் அளவுக்கு அவல நிலைக்கு சட்டம் - ஒழுங்கைத் தள்ளிய திமுக முதல்வருக்கு எனது கடும் கண்டனம்” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

“தமிழகத்தில் உளவுத் துறை செயலிழந்து விட்டது என்பதையே ஆம்ஸ்ட்ராங் படுகொலை காட்டுகிறது” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

“ஒரு தேசிய கட்சியின் தலைவரே வெட்டி கொலை செய்யப்படுகிறார் என்றால் இன்று சாமானிய மக்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கின்றது என்ற கேள்வி அனைவரின் மனதில் மிக பெரிய பதட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது” என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா கண்டனம் தெரிவித்துள்ளார்.

“அமைதிப் பூங்காவாக இருக்கிற தமிழகத்தில் இத்தகைய படுகொலைகளை வன்முறையாளர்கள் நிகழ்த்துவது மிகுந்த வேதனைக்குரியது. இதை வன்மையாக கண்டிக்கிறேன்” என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

“நம் சமூகத்தில், வன்முறைக்கும் மிருகத்தனத்துக்கும் இடமில்லை. ஆனால் கடந்த 3 ஆண்டு கால திமுக ஆட்சியில், தமிழகத்தில் அதுவே வழக்கமாகி விட்டது. தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை சீர்குலைத்துவிட்டு, மாநிலத்தின் முதல்வராகத் தொடரும் தார்மீக உரிமை தனக்கு இருக்கிறதா என்று மு.க.ஸ்டாலின் தன்னையே கேட்டுக்கொள்ள வேண்டும்” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

“ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவர் கூலிப் படையினரால், மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் படுகொலை செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறேன்,” என்று மநீம தலைவர் கமல்ஹாசன் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

“பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை போன்ற கொடும் குற்றச் சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தமிழக அரசு தீவிரமாக முன்னெடுக்க வேண்டும். சமரசம் இல்லாமல் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி அனைவரது பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும்,” என்று தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார்.

மாயாவதி, ராகுல் காந்தி கண்டனம்: பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி எக்ஸ் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள பதிவில், “பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் கே.ஆம்ஸ்ட்ராங் நேற்று மாலை சென்னையில் அவரது வீட்டுக்கு வெளியே படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். அர்ப்பணிப்பும், கடின உழைப்பும் கூடிய தலைவர் அவர். அவரது படுகொலை நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மிகவும் வேதனைக்குரிய இச்சம்பவத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு ஞாயிற்றுக்கிழமை சென்னைக்கு நேரில் சென்று ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்த திட்டமிட்டுள்ளேன். அவருடைய குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்கவுள்ளேன். இத்தருணத்தில் அனைவரும் அமைதியையும், கட்டுப்பாட்டையும் கடைப்பிடிக்குமாறு வேண்டுகோள் விடுக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொடூரமான மற்றும் அருவருக்கத்தக்க வகையில் கொலை செய்யப்பட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது குடும்பத்தினர், நண்பர்கள், ஆதரவாளர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக காங்கிரஸ் தலைவர்கள் மாநில அரசுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளனர். குற்றவாளிகள் விரைவில் சட்டத்தின் முன்பு நிறுத்தப்படுவதை அரசு உறுதி செய்யும் என்று நான் நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

ஜூலை 23-ல் மத்திய பட்ஜெட் தாக்கல்: 2024 - 25 நிதியாண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட் ஜூலை 23-ம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்காக ஜூலை 22 முதல் ஆகஸ்ட் 12-ம் தேதி வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற இருக்கிறது.

தமிழக பாஜகவின் 7 தீர்மானங்கள்: தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில சிறப்பு செயற்குழு கூட்டம் திருவள்ளூர் மாவட்டம் வானகரம் பகுதியில் நடைபெற்றது. இதில், பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுஹான், எல். முருகன், தமிழிசை சவுந்தரராஜன், ஹெச்.ராஜா, வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மூன்றாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்றுள்ள நரேந்திர மோடிக்கு வாழ்த்தும், பாராட்டும், கள்ளச் சாராயம் குடித்து 67 பேர் உயிரிழந்தது தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும், முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவோம் என்று கூறி வரும் கேரள அரசுக்கும், அதை வேடிக்கை பார்க்கும் திமுக அரசுக்கும் கண்டனம், தங்கள் உரிமைக்காக போராடி வரும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை மாநில அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும், சட்டம் - ஒழுங்கினை பராமரிக்கும் சக்தியை இழந்துவிட்ட திமுக அரசுக்கு வன்மையான கண்டனம், நாடாளுமன்றத்தில் செங்கோலை அவமானப்படுத்தியவர்களுக்குக் கண்டனம், அரசியலமைப்புச் சட்டம் வழங்கும் உரிமைகளை தொன்றுதொட்டு பின்பற்றி வரும் அடையாளங்களை அழித்து ஒழிக்க நினைக்கும் முன்னாள் நீதிபதி சந்துருவின் அறிக்கைக்கு கண்டனம் ஆகிய ஏழு தீர்மானங்கள், இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

ஈரான் அதிபர் தேர்தலில் மசூத் பெசெஷ்கியன் வெற்றி: ஈரானில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் சீர்திருத்தங்களை ஆதரிக்கும் வேட்பாளரான மசூத் பெசெஷ்கியன் வெற்றி பெற்றுள்ளார். ஈரான் அதிபர் தேர்தலில் போட்டியிட்ட 4 வேட்பாளர்களில் மசூத் பெசெஷ்கியன் மட்டுமே மிதவாதி என்று கூறப்படுகிறது. மேற்கத்திய நாடுகளோடு ஈரான் கடும் மோதல் போக்கைக் கொண்டுள்ள நிலையில், மேற்கத்திய நாடுகளோடு நட்புறவை ஏற்படுத்த முயல விரும்புவதாக தேர்தலுக்கு முன் மசூத் பெசெஷ்கியன் தெரிவித்திருந்தார் என்பதும் கவனிக்கத்தக்கது.

காசாவில் 5 ஊடகவியலாளர்கள் உட்பட 29 பேர் பலி: காசா மீதான இஸ்ரேல் தாக்குதலில், கடந்த 24 மணி நேரத்தில் 29 பேர் கொல்லப்பட்டதாக காசாவின் சுகாதார அமைச்சகம் கூறியிருக்கும் நிலையில், கொல்லப்பட்டவர்களில் ஐந்து பாலஸ்தீன ஊடகவியலாளர்களும் அடங்குவர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

x