செய்தியாளரை வசைபாடிய அமைச்சர்: சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ!


செய்தியாளரை மிரட்டும் அமைச்சர்

விழாவிற்கு மூன்று மணி நேரம் தாமதமாக வந்த அமைச்சர் குறித்து செய்தி வெளியிட்ட தனியார் தொலைக்காட்சி செய்தியாளரை தாக்க முற்பட்ட அமைச்சர் குறித்த காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சிவகங்கையில் உள்ள தனியார் கல்லூரியில் ஊரக வளர்ச்சித்துறை மற்றும் ஊராட்சி துறை, ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் இளைஞர் திறன் திருவிழா இன்று நடைபெற்றது. ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் விழாவை தொடங்கி வைப்பதற்காக அழைக்கப்பட்டிருந்தார். இவ்விழாவை அமைச்சர் பெரியகருப்பன் காலை 9.45 மணிக்கு தொடங்கி வைப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், விழா 11.50 மணிக்கு தொடங்கியது. இந்நிலையில், விழாவிற்காக காலை 8 மணிக்கு வரவழைக்கப்பட்ட பொதுமக்கள் சுமார் 3 மணி நேரத்துக்கு மேலாக காத்திருக்க நேரிட்டது.

இத்தாமதம் குறித்து தனியார் தொலைக்காட்சியில் செய்தி வெளியிடப்பட்டது. இந்நிலையில், செய்தியை வெளியிட்ட தனியார் தொலைக்காட்சி பத்திரிகையாளரை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் வசைபாடினார். மேலும், அவரை தாக்க முற்பட்டார். இந்த காணொலி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து, சிவகங்கை மாவட்ட பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு நலச்சங்கத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

x