இரவு முழுவதும் மின்தடை: தாம்பரம் அருகே நல்லூரில் சாலை மறியல்


போராட்டத்தில் ஈடுபட்ட நல்லூர் கிராம மக்கள்

தாம்பரம்: தாம்பரம் அருகே நல்லூரில் அடிக்கடி மின் தடை ஏற்படுவதாக கூறிவந்த பொதுமக்கள், நேற்று இரவு முழுவதும் மின் தடை ஏற்பட்டதால் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துார் ஒன்றியம், பூந்தண்டலம் ஊராட்சியில் நல்லூர், புதுநல்லூர் கிராமங்கள் உள்ளன. இங்கு 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.

சோமங்கலம் மின்வாரியம் சார்பில் இந்த கிராமங்களுக்கு மின் விநியோகம் செய்யப்படுகிறது. இங்கு சிறு மழை பெய்தாலே அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு 11 மணி முதல் அதிகாலை 3 மணி வரை மின்சாரம் இல்லாமல் மக்கள் வேதனைக்குள்ளானகினார். மின் தடை காரணமாக கிராமங்களில் குடிநீர் விநியோகம் இல்லாததால் பாதிப்புக்குள்ளாகினா்.

இந்நிலையில் தினமும் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதாக கூறி பூந்தண்டலம் ஊராட்சி மன்ற தலைவர் ஞானபிரகாஷ் தலைமையில் கிராம மக்கள் நல்லூர் - சோமங்கலம் சாலையில் அமர்ந்து இன்று காலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சோமங்கலம் போலீஸார் மற்றும் மின்வாரியத்தினர் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

இது குறித்து நம்மிடம் பேசிய நல்லூர் கிராம மக்கள், “இரவில் அடிக்கடி மின் தடை ஏற்படுவதால் பெரும் சிரமத்திற்கு ஆளாகிறோம். இது குறித்து புகார் தெரிவிக்க மின்வாரிய அலுவலர்களை தொடர்பு கொண்டால் போனை எடுப்பதில்லை. மின் தடையால் காலையில் குடிநீர் விநியோகமும் நடைபெறவில்லை. எங்கள் கிராமத்தில் பெரும்பாலும் கூலி வேலைக்கு போகிறவர்கள் தான் இருக்கிறார்கள். பகல் முழுவதும் வேலை செய்துவிட்டு இரவில் ஓய்வு எடுக்கலாம் என்று வந்தால் மின்சாரம் இருக்காது. இதனால் மனதளவில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம்.

எங்கள் நிலைமையை பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் அவர்கள் கண்டு கொள்ளவில்லை. அதனால் எங்கள் ஊராட்சி மன்றத் தலைவருடன் இணைந்து நாங்கள் இன்று மறியலில் ஈடுபட்டோம். இது தொடக்கம் தான் நிரந்தர தீர்வு கிடைக்கவில்லை எனில் சோமங்கலம் மின் உதவி பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம்” என்றனர்.

x