ராணுவத்தில் சேர்வதற்கான அக்னிபத் சேர்க்கைக்கு எந்த ஒதுக்கீடும் இல்லாதபோது, சாதி,மதச் சான்றிதழ்களைக் கேட்பது ஏன் என்று பாஜக கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) தலைவர் உபேந்திரா குஷ்வாஹா எழுப்பியுள்ளார்.
கடந்த மாதம் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் சார்பில் அக்னிபத் திட்டம் அறிவிக்கப்பட்டது. இளம் தலைமுறைக்கானக் குறுகியகால ராணுவ சேர்க்கைக்கான இத்திட்டத்தில் யாருக்கும், எந்தவிதமான ஒதுக்கீடும் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஜூலை 1-ம் தேதி முதல் துவக்கப்பட்ட சேர்க்கைக்கான விண்ணப்பத்தில் இளைஞர்கள் சார்ந்த சாதி,மதங்கள் என்னவென்று கேட்கப்பட்டுள்ளது. இதன் மீது முன்னாள் மத்திய அமைச்சரும், பிஹாரின் மேல்சபை தலைவருமான உபேந்திரா குஷ்வாஹா கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், "பாதுகாப்புத்துறையின் அமைச்சர் ராஜ்நாத்சிங் அவர்களே, அக்னிபத்தில் எந்தவிதமான ஒதுக்கீடும் இல்லாத போது, சாதிச் சான்றிதழ் கேட்கப்படுவது ஏன்? இதன் மீது சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் பதிலளிக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய அரசின் அக்னிபத் திட்டத்தின்படி இளைஞர்களுக்கு இந்திய ராணுவத்தின் தரைப்படை, கப்பற்படை, விமானப்படை ஆகிய மூன்றிலும் சேரும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. வெறும் நான்கு வருடங்களுக்கு மட்டுமான இந்த திட்டத்திற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இந்த அறிவிப்பை அடுத்த 24 மணி நேரத்தில் நாட்டின் பல மாநிலங்களில் இளைஞர்கள் போராட்டத்தில் இறங்கினர். இது வன்முறையாகவும் மாறி மத்திய அரசின் பல கோடி ரூபாய் சொத்துக்கள் நாசமாயின.
குறிப்பாக உத்தரப்பிரதேசம் மற்றும் பிஹாரில் கடும் வன்முறை வெடித்தது. இதன் காரணமாக மத்திய அரசு தனது அக்னிபத்தில் சில மாற்றங்கள் அறிவித்தது. இதில், நான்கு வருடங்களுக்கு பின் வெளியேற வேண்டிய நிலையில், 25 சதவீதம் பேருக்கு மட்டுமே நிரந்தர வாய்ப்பளிக்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டது. இச்சூழலில் குஷ்வாஹா எழுப்பியுள்ள கேள்வியால் புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது.