அடுத்த தலைமுறைக்கு இந்த மண்ணை ஆரோக்கியமானதாக விட்டுச் செல்ல வேண்டும்: கனிமொழி வேண்டுகோள்


தூத்துக்குடி: அடுத்த தலைமுறைக்கு இந்த மண்ணை ஆரோக்கியமானதாக விட்டுச்செல்ல வேண்டும் என தாமிரபரணியில் தூய்மைப் பணிகளை தொடங்கி வைத்த கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டம் கலியாவூர் மதகில் இருந்து புன்னக்காயல் வரை எக்ஸ்னோரா இண்டர்நேஷனல் ஃபவுண்டேஷன் மூலம் கோமட்சு (Komatsu) நிறுவன சமூக பொறுப்பு நிதியிலிருந்து தாமிரபரணி ஆறு மறுசீரமைக்கும் பணி இன்று தொடங்கியது. இதற்கு ஆட்சியர் கோ.லட்சுமிபதி தலைமை வகித்தார். பணிகளை கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார்.

அப்போது பேசிய கனிமொழி, “தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த வருடம் பெய்த கன மழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அதிகளவு பாதிப்பு ஏற்பட்டது. எனவே நீர் நிலைகளுக்கு தண்ணீர் வரும் வழித்தடங்களை தூர்வார வேண்டும் என்று அனைவரும் வலியுறுத்தினர். எனவே இந்த ஆண்டு மழைக்காலத்துக்கு முன்னதாக தூர்வார வேண்டும் என்பதற்காக இன்று தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது” என்றார்.

மேலும், “தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஏரி, குளங்களில் இருந்து விவசாயிகள் தங்களது விவசாய நிலங்களில் கொட்டுவதற்கு மண் எடுத்துக்கொள்ளலாம் என்ற முக்கியமான அறிவிப்பு மற்றும் அரசாணையை வெளியிட்டுள்ளளார். இதன்மூலம் ஏரி, குளங்களில் அதிகளவு தண்ணீர் சேமித்து வைக்க முடியும். அரசு மட்டுமல்லாமல் தனியார் நிறுவனங்களின் சமூக பொறுப்பு நிதி மூலமும் நீர்நிலைகள் தூர்வாரப்படுகின்றன. தூத்துக்குடி மாவட்டத்தில் மழையால் நீர்நிலைகள் மட்டுமல்லாமல் பள்ளிகள், சிறு, குறு தொழில்கள், விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. எனவே அவற்றையும் தனியார் நிறுவனங்களின் சமூக பொறுப்பு நிதி மூலம் மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன்.” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டினை அனைத்து தரப்பினரும் குறைத்துக்கொள்ள வேண்டும். அடுத்த தலைமுறையினருக்கு நாம் இந்த மண்ணை ஆரோக்கியமானதாக விட்டுச்செல்ல வேண்டும். இந்த உலகத்தை பாதுகாப்பதை நாம் முக்கிய கடமையாக கொள்ள வேண்டும்.” என்றார்.

தொடர்ந்து, கீழவல்லநாட்டில் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியை கனிமொழி ஆய்வு செய்தார். பின்னர் புதுக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில், கர்ப்பிணிகளுக்கான புதிய அல்ட்ராசோனோகிராம் சேவையை கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார். மேலும், மூக்குப்பீறி மற்றும் மாப்பிள்ளையூரணி ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு பாராட்டுச் சான்று, ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறந்த குழந்தைகளுக்கு பிறப்புச் சான்று ஆகியவற்றையும் அவர் வழங்கினார்.

x