பணம் கொடுத்து மருத்துவம் படிப்பதால் ஏழை மக்களின் உயிர்களோடு விளையாடுகிறார்கள்; விளாசும் மாணிக்கம் தாகூர்


இன்று விருதுநகரில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் பங்கேற்றார். நிகழ்ச்சி முடிந்ததும் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”மக்களவையில் பாஜக எம்பி-க்களின் எண்ணிக்கை 303 லிருந்து 240 ஆக குறைந்துள்ளதை அறியாமல் மோடி தனது ஆணவப் போக்கை தொடர்கிறார். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளை பேசவிடாமல் செய்கிறார். 239 பேர் உள்ள எதிர்க்கட்சி வரிசையில் ராகுல் தலைமையில் கடுமையாக பணியாற்றுகிறோம். ஆனால் எதிர்கட்சிகளை விமர்சனம் செய்யும் போது தரம் தாழ்ந்த பேச்சுகள் தொடர்கின்றன” என்றார்.


மேலும், ”மணிப்பூர் காங்கிரஸ் எம்பி-யை பேச விடாமல் செய்கிறார்கள். ஒரு நிமிடம் பேச அனுமதி கேட்டால் கொடுப்பதில்லை. ஆனால் பிரதமர் மோடி 2.15 நிமிடம் பேசினார். மணிப்பூர் மக்களின் பிரச்சனையை கேட்க விரும்பாத மோடியின் குரலை நாங்கள் கேட்க விரும்பவில்லை. அதனால் பிரதமர் பேசும் போது எதிர்க்கட்சிகள் அவரை பேச விடாமல் குரல் கொடுத்தோம். நான் காங்கிரஸ்காரன் என்பதால் தான் அவர் கொடுத்த தண்ணீரை கூட வாங்கி குடிக்கவில்லை. தமிழகத்தில் தொடர்ச்சியாக அரசியல் தலைவர்கள் கொலை செய்யப்படுகின்றனர். இதனை காவல்துறையும், உளவுத்துறையும் இணைந்து தடுக்க வேண்டும்” என்றார்.


தொடர்ந்து பேசிய அவர், ”விருதுநகரில் மாவட்ட அளவில் அரசு பள்ளிகளில் 10 மற்றும் பிளஸ் ஒன் வகுப்பில் பள்ளியளவில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவியருக்கு காமராஜர் பிறந்த நாள் அன்று காங்கிரஸ் கட்சி சார்பில் ’காமராஜர் விருது’ வழங்க திட்டமிட்டுள்ளோம். நீட் வேண்டாம் என்ற தவெக தலைவர் விஜயின் கருத்தை வரவேற்கிறேன். இந்திய மருத்துவர்கள், ஸ்டெதஸ்கோப் பிடிக்கத் தெரியாத மருத்துவர்களாக உருவாகப் போகிறார்கள். நீட் தேர்வில் சீர்திருத்தம் தேவை. பணத்தை கொடுத்து மருத்துவரானவர்கள், ஏழை மக்களின் உயிர்களோடு விளையாடப் போகிறார்கள். இது இந்தியாவுக்கே செய்யும் துரோகம். பாஜக செய்யும் தவறுகளை நியாயப்படுத்துவது மட்டும் தான் அண்ணாமலையின் வேலை“ என்றார்.

x