ஆம்ஸ்ட்ராங் கொலையில் உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்: தமிழக அரசுக்கு விசிக, காங்கிரஸ் கோரிக்கை


சென்னை: பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உண்மைக் குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்ய வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை ஆகியோர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங். சென்னை பெரம்பூரில் வசித்து வந்த இவர் நேற்று இரவு மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தலித் சமூக மக்களின் பிரச்னைகளில் தலையிட்டு ஆம்ஸ்ட்ராங் தீர்வுகளை பெற்றுத் தந்து வந்ததாகவும், இதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, ரவுடி ஆற்காடு சுரேஷ் கும்பலால் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டதாகவும் பல்வேறு ஊடகங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் போலீஸாரிடம் 8 பேர் சரணடைந்துள்ளனர். இதற்கிடையே ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும், உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி, அவரது ஆதரவாளர்கள், ஆம்ஸ்ட்ராங் சடலம் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆம்ஸ்ட்ராங் படுகொலை தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு இன்று வந்தார். அப்போது அங்கு கூடியிருந்த தொண்டர்களை அவர் சந்தித்துப் பேசினார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், "ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரணடைந்தவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை.

எனவே, இந்த கொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகள், பின்னணியில் உள்ளவர்கள் அனைவரையும் கைது செய்ய வேண்டும். ஆம்ஸ்ட்ராங் சடலத்தை பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும்.” என்றார்.

இதேபோல், காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வ பெருந்தகையும், "ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரணடைந்தவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல. இந்த சம்பவத்தில் உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்" என, தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.

x