'தமிழக மாநில எல்லைகளில் உள்ள 21 சோதனை சாவடிகளை மூடக் கூடாது' - போக்குவரத்து பணியாளர் ஒன்றிப்பு


மதுரை: “தமிழகத்தில் மாநில எல்லைகளில் உள்ள 21 சோதனை சாவடிகளை மூடும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும். கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஜூன் 20 முதல் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும்” என தமிழ்நாடு போக்குவரத்து துறை பணியாளர் ஒன்றிப்பு வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு போக்குவரத்து துறை ஒன்றிப்பின் மாநில மைய சிறப்புத் தலைவர் கு.பாலசுப்பிரமணியன் மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: “தமிழகத்தில் போக்குவரத்துறையில் அரசால் அனுமதிக்கப்பட்ட சுமார் 3 ஆயிரம் பணியிடங்கள் உள்ளன. இதில் 1300 பணியிடங்கள் காலியாக உள்ளது. இப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.

தமிழகத்தில் 32 வட்டார போக்குவரத்து அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த காலியிடங்களில் அதே அலுவலகத்தில் நிர்வாக திறமை கொண்ட நேர்முக உதவியாளர்களை பொறுப்பு வட்டார போக்குவரத்து அலுவலராக நியமிக்க வேண்டும். தமிழக எல்லைகளில் சுமார் ரூ.200 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டித்தரும் 21 சோதனை சாவடிகளை மூட தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இந்த முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும். இந்தியாவில் அதிக விபத்துகள் நடைபெறும் மாநிலமாக தமிழகம் உள்ளது. இந்த நிலையை மாற்ற வாகனங்களுக்கு தகுதிச்சான்று வழங்குவதற்கும், ஓட்டுநர் உரிமங்கள் வழங்குவதற்கும் மத்திய மோட்டார் வாகனச் சட்டப்படி மனித தலையீடு இல்லாத தொழில் நுட்பத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

இந்தக் கோரிக்கைகளை வலிறுத்தி சென்னை, சேலம், வேலூர், கோவை, மதுரை, நெல்லை, திருச்சியில் ஜூன் 13-ல் ஆர்ப்பாட்டம், ஜூன் 20 முதல் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும்” என்றார்.

x