ரூ.100 கோடி நில மோசடி புகார்: எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆதரவாளர்கள் வீடுகளில் சிபிசிஐடி சோதனை


கரூர் அருகே மணல்மேடு தாளப்பட்டியில் உள்ள யுவராஜ் வீட்டில் நேற்று சோதனை மேற்கொண்ட சிபிசிஐடி போலீஸார்.

கரூர்: கரூரில் ரூ.100 கோடி மதிப்பிலான நில மோசடி புகார் தொடர்பாக, அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் 3 பேரின் வீடுகளில் சிபிசிஐடி போலீஸார் நேற்று சோதனை மேற்கொண்டனர்.

கரூரில் 22 ஏக்கர் நிலத்தை மோசடியாக பதிவு செய்ததாகவும், அதன் மதிப்பு ரூ.100 கோடி என்றும்7 பேர் மீது, கரூர் நகர காவல் நிலையத்தில் மேலக்கரூர் சார்பதிவாளர் (பொ) முகமது அப்துல் காதர் புகார் அளித்தார். இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இந்த வழக்கில் தானும் சேர்க்கப்படலாம் என்று கருதிய அதிமுகமுன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கரூர் மாவட்டமுதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுதள்ளுபடி செய்யப்பட்டது. இதனிடையே, நிலத்தின் உரிமையாளர் பிரகாஷ் அளித்த புகாரின்பேரில், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது சகோதரர் சேகர் உள்ளிட்ட 13 பேர் மீது வாங்கல் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

இதையடுத்து, உடல்நிலை பாதிக்கப்பட்ட தனது தந்தையைகவனித்துக் கொள்ள வேண்டியிருப்பதால், முன்ஜாமீன் வழங்குமாறு எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீண்டும் தாக்கல் செய்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனு மீது நாளை உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்தார்.

இந்நிலையில், எம்.ஆர்.விஜயபாஸ்கரின் பெட்ரோல் பங்க் ஊழியர் மணல்மேடு தாளப்பட்டி யுவராஜ் வீட்டில் சிபிசிஐடி போலீஸார் நேற்று சோதனை மேற்கொண்டனர். மேலும், தோட்டக்குறிச்சி செல்வராஜ், பத்திரப் பதிவின்போது சாட்சிக் கையெழுத்திட்ட முனியநாதனூர் ஈஸ்வரமூர்த்தி ஆகியோரது வீடுகளில் திருச்சி, நாமக்கல், சேலத்தை சேர்ந்த சிபிசிஐடி போலீஸார்சோதனை மேற்கொண்டனர்

x