தமிழகத்தில் பாஜக வளர்ந்ததுபோல மாயத்தோற்றம் ஏற்படுத்துகிறார் அண்ணாமலை: இபிஎஸ் சாடல்


கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு நேற்று பேட்டியளித்த அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி.

கோவை: தமிழகத்தில் பாஜக வளர்ந்திருப்பதுபோல மாயத் தோற்றத்தை அண்ணாமலை உருவாக்கிக் கொண்டிருக்கிறார் என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிட்டால் 3 அல்லது 4-வது இடம்தான் கிடைக்கும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். அவர் மெத்தப் படித்தவர், மிகப்பெரிய அரசியல் ஞானி. மக்களவைத் தேர்தலில் விழுப்புரத்தில் அதிமுக வேட்பாளர் 6800 வாக்குகள் மட்டுமே குறைவாக பெற்றுள்ளார். அதிமுக 2-ம் இடத்தில்தான் உள்ளது.

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வாக்காளர்களை பட்டியில் அடைத்து, பணம், பரிசுப் பொருட்கள் கொடுத்து வெற்றி பெற்றனர். ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெறவில்லை. அண்ணாமலை வந்த பிறகுதான்பாஜக தமிழகத்தில் வளர்ந்ததுபோல் மாயத் தோற்றத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார். அது உண்மை இல்லை.

2014 மக்களவைத் தொகுதியில் கோவையில் போட்டியிட்ட சி.பி.ராதாகிருஷ்ணன், அதிமுக வேட்பாளரைவிட 42 ஆயிரம் வாக்குகள் குறைவாகப் பெற்றார். 2024தேர்தலில் அண்ணாமலை, திமுகவேட்பாளரைவிட 1.18 லட்சம் வாக்குகள் குறைவாகப் பெற்றுள்ளார். பாஜக எங்கு வளர்ந்துள்ளது?

2014 மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி 18.80 சதவீத வாக்குகளும், 2024 தேர்தலில் 18.28சதவீதம் வாக்குகள் பெற்றுள்ளது.அதாவது 0.52 சதவீதம் வாக்குகள் குறைவாகப் பெற்றுள்ளது. பாஜகதலைவராக உள்ள அண்ணாமலை, மத்திய அரசிடமிருந்து தமிழகத்துக்கு என்ன திட்டத்தைப் பெற்றுக் கொடுத்துள்ளார்.

இந்தியாவில் ஏற்கெனவே 300-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பாஜக, இந்த முறை சரிவை சந்தித்து, கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது. அண்ணாமலை தன்னை அடையாளப்படுத்துவதற்காக பேசிக் கொண்டிருக்கிறார். தமிழக மக்கள் மக்களவைத் தேர்தலில் ஒருமாதிரியும், சட்டப்பேரவைத் தேர்தலில் மற்றொரு மாதிரியும் வாக்களிக்கிறார்கள்.

அதிமுக விதிமுறைகள்படிதான், கட்சிக்கு விரோதமாக செயல்பட்ட ஓ.பன்னீர்செல்வம் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். இது பொதுக்குழு எடுத்த முடிவு. சசிகலா கட்சியிலேயே இல்லை. அவர் எப்படி கட்சியை ஒன்றிணைக்க முடியும். அரசியலை விட்டு விலகுவதாக அறிவித்தவர் சசிகலா. அவர் மீண்டும் இணைவதற்கு, அதிமுக என்ன கார்ப்பரேட் கம்பெனியா?

எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகுஅதிமுக இரண்டாகப் பிளவுபட்டபோது, ஜானகி விட்டுக் கொடுத்து, ஜெயலலிதாவை ஏற்றுக் கொண்டு,மீண்டும்ஒருமித்த கருத்துடன் கட்சியில் இருந்து வெளியேறினார். அவரைப் போன்ற நற்பண்புகளும், நல்ல எண்ணங்களும் சசிகலாவுக்கு இருந்தால், நன்றாக இருக்கும்.

கல்வியை கொச்சைப்படுத்தி திமுகவைச் சேர்ந்த ஆர்.எஸ்.பாரதிபேசி இருப்பது கண்டிக்கத்தக்கது. கள்ளச் சாராய விவகாரத்தை திமுக அரசு திட்டமிட்டு மறைக்கிறது. ஆனைமலை, விழுப்புரம், கடலூர், திருத்தணியிலும் கள்ளச் சாராய வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்குசீர்கெட்டு இருக்கிறது. வரும்2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றிபெற்று, மீண்டும் ஆட்சி அமைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

x