நம்பிக்கை துரோகி என்ற பெயருக்கு மிகவும் பொருத்தமானவர் பழனிசாமி: அண்ணாமலை விமர்சனம்


விழுப்புரம்: நம்பிக்கை துரோகி என்ற பெயருக்கு மிகவும் பொருத்தமானவர் பழனிசாமி. அதிமுகவுக்கு அடிமையாக இருப்பதற்காக நாங்கள்அரசியல் செய்யவில்லை என்றுதமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார்.

விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட திருவாமாத்தூரில் நேற்றுபாமக வேட்பாளர் சி.அன்புமணியை ஆதரித்துப் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தயாராக இருக்கிறாரா, இல்லையா என்பதை முதல்வர் ஸ்டாலின் தெளிவுபடுத்த வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க முதல்வருக்கு துளியும் மனமில்லை. பிஹாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அனுமதி இருக்கும்போது, தமிழகத்தில் மட்டும் அனுமதி இல்லையா?

சிலர் சுயலாபத்துடன் செயல்பட்டு, அதிமுகவை அழித்துக் கொண்டிருக்கிறார்கள். நான்கைந்து தலைவர்களின் சுயலாபத்துக்காக, அவர்களின் அதிகாரத்துக்காக அதிமுகவை அழித்துக் கொண்டிருக்கிறார்கள். இதனால் மனமுடைந்த அதிமுகவினர், கட்சி மாறி வருகின்றனர். நம்பிக்கை துரோகி என்ற வார்த்தை பழனிசாமிக்கே பொருந்தும்.

அவரை பிரதமர் மோடி, தனது பக்கத்தில் அமர வைத்தார். ஆனால், தன் மீது நம்பிக்கை வைத்தபிரதமர் மோடியின் முதுகிலேயே குத்தியவர்தான் பழனிசாமி. பாஜகவை வேண்டாம் என ஒதுக்கிய பழனிசாமியால், மக்களவைத் தேர்தலில் பல இடங்களில் அதிமுக வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்.

அதிமுகவின் கோட்டை என்று கருதப்படும் கோவையிலேயே, 3 சட்டப்பேரவைத் தொகுதிகளில் அக்கட்சி டெபாசிட் இழந்துள்ளது.ஈரோடு இடைத்தேர்தலின்போது பழனிசாமி என்னிடம் தொலைபேசி வாயிலாகப் பேசினார்.

அப்போது, ‘ஈரோடு என்னுடைய கோட்டை, அதனால் நாங்கள் அங்கு போட்டியிடுகிறோம், ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வேட்பாளரை நிறுத்த வேண்டாம் என்று அவரிடம் கூறுங்கள்’ என்று கேட்டுக் கொண்டார். தோல்வியடைவோம் என்று தெரிந்தும், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிட்டது ஏன்?

அருகதை இல்லை... தற்போது விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடாததற்கு பழனிசாமி புதுப்புது காரணங்களைக் கூறுகிறார். 2026-ம்ஆண்டும் சட்டம்-ஒழுங்கு சரியில்லாமல் இருந்தால், அப்போது நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலையும் அவர் புறக்கணிப்பாரா? 2026 சட்டப்பேரவைத் தேர்தலின்போது தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீராகி விடுமா?அதிமுக சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தினால் கூட்டமே வருவதில்லை. அந்தக் கட்சி சிறிது சிறிதாக கரையத் தொடங்கிவிட்டது.

தன் கட்சியைக் காப்பாற்ற முடியாத பழனிசாமி, எனக்கு அறிவுரைகூறத் தேவையில்லை. அதிமுகவுக்கு அடிமையாக இருப்பதற்காக நாங்கள் அரசியல் செய்ய வரவில்லை. பாஜகவுக்கும், எனக்கும் பாடம் எடுக்கும் அருகதை பழனிசாமிக்கு இல்லை.

இவ்வாறு அண்ணாமலை கூறினார்

x