சென்னை: விழுப்புரத்தில் ஒருவர் உயிரிழக்க காரணம் கள்ளச் சாராயம் அல்ல என்று தமிழக சட்டத் துறை அமைச்சர் ரகுபதி விளக்கம் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தி.குமாரமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன் (65). இவர் சாராயம் குடித்து, உடல்நிலை சரியில்லாமல் கடந்த ஜூன் 30-ம்தேதி இருவேல்பட்டு அரசு ஆரம்பசுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்து வருவாய், காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கீழ்க்கண்ட விவரங்கள் தெரியவந்தன. ஜூன் 29-ம் தேதி இரவு புதுச்சேரி மடுகரை அரசு சாராயக் கடையில் முருகன் என்பவர் 5 பாக்கெட் சாராயம் வாங்கி 2 பாக்கெட்களை தானேகுடித்துவிட்டு, ஜெயராமனுக்கு 2 பாக்கெட்டும், சிவசந்திரன் என்பவருக்கு ஒரு பாக்கெட்டும் கொடுத்துள்ளார். இதில் ஜெயராமன் உடல்நலம் சரியின்றி 2 நாட்களாக சாப்பிடாமல் தொடர்ந்து குடித்துக் கொண்டிருந்ததால் உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
முருகன், சிவசந்திரன் ஆகிய இருவரும் முண்டியம்பாக்கம் அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, 3 பேரின்ரத்த மாதிரிகளும் விழுப்புரம்வட்டார தடய அறிவியல் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டன. இதில், அவர்கள் அருந்தியது எத்தனால்(வழக்கமான மது) என்றும், மெத்தனால் (விஷ சாராயம்) இல்லை என்றும் மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிகிச்சைக்கு பிறகு அவர்கள் 2 பேரும் நல்ல நிலையில் கடந்த ஜூலை 3-ம் தேதி அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஜெயராமன் அதிக அளவு மதுப்பழக்கம் உள்ளவர் என்றும், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி கடந்த 4-ம் தேதி உயிரிழந்தார் என்றும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.இதுதான் நடந்தது.
ஆனால், விவரங்களை சரிபார்க்காமல், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி எக்ஸ் தளத்தில் அவசர கதியில் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். கள்ளச் சாராய மரணம் என்று கூறி, உயிரிழப்பிலும் அரசியல் ஆதாயம் தேடப் பார்க்கிறார்.
எல்லை பகுதிகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் வாகனசோதனை கடுமையாக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி சாராய கடத்தலை தடுக்க தமிழக எல்லை பகுதிகளில் ரோந்து பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
எனவே, இந்த உயிரிழப்பு கள்ளச்சாராயத்தால் நிகழவில்லை என்று உறுதியாக தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. தவறான தகவல் தெரிவிப்பதை பழனிசாமி நிறுத்திக்கொள்ள வேண்டும்