விடாமல் துரத்திய ஓபிஎஸ் ஆதரவாளர்கள்: மாட்டு தொழுவத்தில் ஒற்றைத் தலைமை தீர்மானத்தை நிறைவேற்றிய ஈபிஎஸ் ஆதரவாளர்கள்


ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மோதல்

ராமநாதபுரம் மாவட்டம், நயினார் கோவில் ஒன்றியத்தில் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடத்தி, ஒற்றைத் தலைமை குறித்த தீர்மானம் நிறைவேற்ற இருந்த நிலையில், ஓபிஎஸ் அணியினர் இரண்டு முறை தடுத்து நிறுத்தியதால் மாட்டு தொழுவத்தில் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி ஒற்றைத் தலைமை குறித்த தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளனர்.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் நாளுக்கு நாள் உச்சம் பெற்று வருகிறது. ஓபிஎஸ் அணியினர், ஈபிஎஸ் அணியினர் என மாறி மாறி போஸ்டர் ஒட்டி தங்களது எதிர்ப்பையும், ஆதரவையும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று மாலை ராமநாதபுரம் மாவட்டம் நயினார் கோவில் ஒன்றியத்தில் ஈபிஎஸ் அணியினர் சார்பாக ஆலோசனைக்கூட்டம், நடத்தி ஒற்றை தலைமை குறித்த தீர்மானத்தை நிறைவேற்றுவதற்காக தனியார் திருமண மண்டபத்தை வாடகைக்கு எடுத்திருந்தனர்.

இதனை அறிந்து கொண்ட ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ராமநாதபுரம் மாவட்ட அதிமுக ஐடி விங் துணைச் செயலாளர் எஸ்.என். சோலைமுருகன் தலைமையில் சுமார் 100 பேர் கூடினர். மேலும், முன்னதாக கூட்டம் நடைபெறக் கூடாது என்று பரமக்குடி துணை காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர். ஆனால், அதனையும் மீறி கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில், ஓபிஎஸ் அணியினர் மண்டபத்தை பூட்டு போட்டு பூட்டி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வந்தவர்களை தடுத்து நிறுத்தினர்.

தொடர்ந்து, உடனடியாக மற்றொரு மண்டபத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தலாம் என்று ஈபிஎஸ் அணியினர் திட்டமிட்ட நிலையில், மீண்டும் அங்கு நேரில் சென்று ஓபிஎஸ் அணியினர் கூட்டத்தை நடத்த விடாமல் தடுத்து நிறுத்தினர். இதனால், இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு பரமக்குடியில் பரபரப்பு நிலவியது. மேலும், அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க அப்பகுதியில் பாதுகாப்பிற்காக காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.

இது குறித்து சோலைமுருகன் காமதேனுவிடம் கூறும்போது, "ஈபிஎஸ் ஆதரவாளர்களால் எங்கள் பகுதியில் நடைபெற இருந்த இரண்டு ஆலோசனை கூட்டங்களையும் தடுத்து நிறுத்தினோம். இதனால், ஆலோசனைக் கூட்டத்திற்கு தடையாக இருந்த எங்கள் மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து, எங்கள் பகுதி கிளைச் செயலாளர் வீட்டில் பின்பகுதியில் உள்ள மாட்டு தொழுவத்தில் ஆலோசனைக் கூட்டத்தை மாவட்ட செயலாளர் முனுசாமி தலைமையில் நடத்தி, ஒற்றைத் தலைமை குறித்த தீர்மானத்தை நிறைவேற்றி உள்ளார்" என்றார்.

x