பாஜக கூட்டணி வேட்பாளரை தோற்கடியுங்கள்: விக்கிரவாண்டி வாக்காளர்களுக்கு முதல்வர் வேண்டுகோள்


சென்னை: சமூக நீதிக்குத் துரோகம் செய்த பாஜக கூட்டணி வேட்பாளரை தோற்கடிக்க வேண்டும் என்று விக்கிரவாண்டி தொகுதி வாக்காளர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

விக்கிரவாண்டி தொகுதி திமுகஎம்எல்ஏ என்.புகழேந்தி காலமானதைத் தொடர்ந்து, அத்தொகுதிக்கு ஜூலை 10-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாஜக கூட்டணியில் பாமக சார்பில் அன்புமணி போட்டியிடுகின்றனர்.

இத்தேர்தலையொட்டி பொதுமக்களிடம் வாக்கு சேகரிக்கும் காணொலிக்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

இண்டியா கூட்டணி வேட்பாளராகப் போட்டியிடும் அன்னியூர் சிவாஇந்த மண்ணின் மைந்தர், மக்களோடு மக்களாக, மக்களுக்காகப் பணியாற்றும் மக்கள் தொண்டர். 1986-ம் ஆண்டு முதல் அன்னியூர் சிவாவை நான் பார்த்து வருகிறேன். இவருக்கு ஜூலை 10-ம் தேதி உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து விக்கிரவாண்டி தொகுதியின் எம்எல்ஏவாக தேர்ந்தெடுத்து அனுப்புமாறு அன்போடும், உரிமையோடும் கேட்டுக்கொள்கிறேன்.

ஒரு கோடியே 16 லட்சம் மகளிர்மாதந்தோறும் ரூ.1000 உரிமைத் தொகை பெறுகின்றனர். இம்மாதத்தில் இருந்து மேலும் 1 லட்சத்து 48 ஆயிரம் பெண்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்பட உள்ளது. மகளிருக்கு இலவசப் பேருந்து வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் இளைஞர்களை அனைத்து வேலைகளையும் பெற தகுதி உள்ளவர்களாக தரம் உயர்த்தி இருக்கிறோம்.

‘புதுமைப்பெண்’ திட்டம் மூலமாக அரசு பள்ளியில் படித்து கல்லூரி கல்விக்கு வரும் மாணவியருக்கு மாதந்தோறும் ரூ.1000 தரப்படுகிறது. இதேபோன்று மாணவர்களுக்கும் ‘தமிழ் புதல்வன்’ திட்டம் மூலமாக தரப்படும். இப்படி ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஏதாவது ஒரு நேரடி பலன் கிடைக்கும் வகையில் அரசு செயல்பட்டு வருகிறது.

திமுக அரசு என்றாலே சமூக நீதி அரசு என்பது அனைவருக்கும் தெரியும். பிற்படுத்தப்பட்டோருக்கு தனி துறையை உருவாக்கியது கருணாநிதிதான். வன்னியர் உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்துக்கு 20 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கியது, பட்டியலின சமூகத்தின் இடஒதுக்கீட்டை அதிகரித்ததும் திமுக ஆட்சிதான்.

அம்பேத்கர் பிறந்தநாளை சமத்துவ நாளாக அறிவித்திருக்கிறோம். ஏழை எளியோரின் வாழ்க்கை முன்னேற்றத்துக்காக பெரும் பங்காற்றி மறைந்த முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமிக்கு சிலையுடன் கூடிய மணிமண்டபமும் அமைக்கப்பட்டு வருகிறது. 1987-ம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தில் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த சமூகநீதிப் போராளிகள் 21 பேருக்கு நினைவகம் கட்டப்பட்டு வருகிறது. இவை இரண்டையும் விரைவில் திறந்து வைப்பேன்.

சமூக நீதிக்கு எதிரான பாஜக கூட்டணியை தோற்கடிப்பதன் மூலமாக சமூக நீதிக்கு துரோகம் இழைப்பவர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும்

x