பிரிட்டன் புதிய பிரதமர் ஸ்டார்மர் பின்புலம் முதல் சென்னையில் ஆம்ஸ்ட்ராங் படுகொலை வரை | Top 10 விரைவுச் செய்திகள்


பிரிட்டனின் புதிய பிரதமர் கீர் ஸ்டார்மர்! பிரிட்டனில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் கீர் ஸ்டார்மர் தலைமையிலான லேபர் கட்சி அறுதிப் பெரும்பான்மை வெற்றியை பெற்றுள்ளது. அங்கு மொத்தமுள்ள 650 இடங்களுக்கு பொதுத் தேர்தல் நடைபெற்றது. அதன் வாக்குகள் எண்ணப்பட்டன. அதில் லேபர் கட்சி 412 இடங்களில் வெற்றி பெற்றது. கன்சர்வேட்டிவ் கட்சி 121 இடங்களில் மட்டுமே வென்றது. ஆட்சி அமைப்பதற்கான அறுதிப் பெரும்பான்மையுடன் லேபர் கட்சி வெற்றி பெற்றதை அடுத்து, அக்கட்சியின் தலைவர் கீர் ஸ்டார்மர் பிரிட்டன் பிரதமராக பதவி ஏற்றார்.

அதனைத் தொடர்ந்து பிரதமராக அவர் தனது முதல் உரையை நிகழ்த்தினார். அப்போது அவர் “தற்போது மாற்றத்துக்கும், அரசியலானது சேவைக்கு திரும்புவதற்கும் நாட்டு மக்கள் வாக்களித்துள்ளனர். சேவை என்பது ஒரு சிறப்புரிமை, உங்கள் அரசாங்கம் ஒவ்வொரு தனிமனிதனையும் மரியாதையுடன் நடத்த வேண்டும் என்ற எளிய ஒப்புதலுடன் இன்று நாம் தொடங்கலாம். அரசியல் நன்மைகள் செய்வதற்கான சக்தி. நாங்கள் அதனை உங்களுக்கு காட்டுவோம். நாங்கள் தொழிலாளர் கட்சியை சேவைக்கு திரும்புவதற்காக மாற்றியுள்ளோம். அப்படிதான் நாங்கள் ஆட்சி செய்ய உள்ளோம். நாட்டுக்கே முன்னுரிமை... கட்சி இரண்டாம் பட்சமே...

பொறுமையைான மற்றும் அமைதியான மறு உருவாக்கத்துக்கு இந்த அரசு உறுதி பூண்டுள்ளது. மரியாதையுடனும் பணிவுடனும் தேசத்தை புதுப்பிக்கும் இந்தப் பணியில் இணைந்து கொள்ள உங்கள் அனைவரையும் நான் அழைக்கிறேன். நமது பணி அவசரமானது. அதனை நாம் இன்றே தொடங்குவோம்" என்று கீர் ஸ்டார்மர் பேசினார்.

கடந்த 2005-ம் ஆண்டு நடந்த தேர்தலில் லேபர் கட்சி வெற்றி பெற்றது. அப்போது கார்டன் பிரவுன் பிரதமராக இருந்தார். 2010 தேர்தலில் அக்கட்சி தோல்வி அடைந்தது. 14 ஆண்டுக்குப் பிறகு லேபர் கட்சி ஆட்சியைப் பிடித்துள்ளது ஸ்டார்மர் பிரதமராக பொறுப்பேற்றுள்ளார். இதன் மூலம் பிரிட்டனில் கடந்த 14 ஆண்டுகளாக நடந்து வந்த கன்சர்வேட்டிவ் கட்சியின் ஆட்சி முற்று பெற்றது.

யார் இந்த கீர் ஸ்டார்மர்? கீர் ஸ்டார்மர் 1962-ஆம் ஆண்டு செப்டம்பர் 2 ஆம் தேதி லண்டனில் சர்ரே ஆக்ஸ்டெட் பகுதியில் ஒரு தொழிலாளர் குடும்பத்தில் பிறந்தார். அவரது தாய் செவிலியராக வேலை செய்து வந்தார். பள்ளிப் படிப்பை முடித்த ஸ்டார்மர் லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார். இவருடன் பிறந்தவர்கள் மூன்று நபர்கள் ஆவார்கள். இவர் சட்டத்துறையில் நிபுணத்துவம் கொண்டவராக அறியப்படுகிறார்.

கெய்ர் ஸ்டார்மர் அரசியலுக்கு வருவதற்கு முன்னதாக, மனித உரிமைகளைப் பாதுகாக்கும் வழக்கறிஞராக இருந்தார். டோனி பிளேயர் பிரதமராக இருந்த போது பிரிட்டன் அரசு ஈராக் மீது படையெடுத்த நிலையில், அதை மிகக் கடுமையாக எதிர்த்தவர் தான் இந்த ஸ்டார்மர் என்பது கவனிக்கத்தக்கது.

2015-ல் தான் இவர் தேர்தல் அரசியலுக்குள் நுழைந்தார். ஹோல்போர்ன் மற்றும் செயின்ட் பான்க்ராஸ் தொகுதியில் போட்டியிட்ட இவர் எம்.பி.யாக தேர்வானார். இவரின் உழைப்பை அங்கீகரிக்கும் விதமாக உடனடியாக லேபர் கட்சியில் முக்கிய பதவிகள் கிடைத்தன. இதையடுத்து ஸ்டார்மர் 2020 இல் லேபர் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது, பிரிட்டனின் பிரதமராக பதவியேற்றுள்ளார்.

“தோல்விக்கு முழு பொறுப்பேற்கிறேன்” - ரிஷி சுனக்: பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியை தழுவியுள்ளது கன்சர்வேட்டிவ் கட்சி. இந்நிலையில், தோல்வி குறித்து ரிஷி சுனக் கூறும்போது, “தேர்தலில் லேபர் கட்சி வெற்றி பெற்றுள்ளது. நான் கீர் ஸ்டார்மரை தொடர்பு கொண்டு பேசினேன். அவருக்கு எனது வாழ்த்தை தெரிவித்தேன். இன்று ஆட்சி அதிகாரம் அமைதியான முறையில் கைமாறியுள்ளது. நம் நாட்டின் எதிர்காலம் சார்ந்து நம் அனைவருக்கும் நம்பிக்கை அளிக்கும் வகையில் ஆட்சி அமைய வேண்டும். இந்த தோல்விக்கு நான் முழு பொறுப்பேற்கிறேன். என்னை மன்னிக்கவும்” எனத் தெரிவித்தார்.

பிரிட்டனின் முதல் தமிழ் எம்.பி உமா குமரன்! பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் ஸ்ட்ராட்ஃபோர்ட் மற்றும் போ நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார் உமா குமரன். இலங்கை வம்சாவளி தமிழரான இவர் லேபர் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

இது தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில், “பிரிட்டனின் ‘ஸ்ட்ராட்ஃபோர்ட் அண் போ’ நாடாளுமன்றத் தொகுதியின் முதல் உறுப்பினரும், பிரிட்டானிய நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வாகியுள்ள முதல் தமிழ்ப் பெண்மணியுமாகிய உமா குமரனுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள். தமிழர்களுக்குத் தாங்கள் மிகப் பெரும் பெருமையைத் தேடித் தந்துள்ளீர்கள்!” என்று பதிவிட்டுள்ளார்.

“விழுப்புரம் முதியவர் உயிரிழந்தது கள்ளச் சாராயத்தால் அல்ல” :புதுச்சேரியில் இருந்து சட்டவிரோதமாக வாங்கி வரப்பட்ட சாராயப் பாக்கெட்டுகளை குடித்ததால், விழுப்புரம் அருகே ஒருவர் உயிரிழந்தார் என்றும், இந்த உயிரிழப்பு கள்ளச் சாராயத்தால் நிகழவில்லை எனவும் தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறும்போது, “ஜெயராமன் என்பவர் அதிக அளவு மதுப்பழக்கம் உள்ளவர் என்றும், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார் என்றும் விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார். மேலும், புதுச்சேரியில் இருந்து சட்டவிரோதமாக சாராயப் பாக்கெட்டுகளை வாங்கி வந்த முருகன் என்பவர் மீது குற்றவழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதுதான் நடந்தது” என்று அவர் கூறியுள்ளார்.

புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக திமுக போராட்டம்: பாஜக அரசால் அமல்படுத்தப்பட்டுள்ள மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து சனிக்கிழமை திமுக சட்டத் துறை சார்பில் மாபெரும் உண்ணாவிரத அறப் போராட்டம் நடைபெறவிருப்பதாக திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ எம்.பி. தெரிவித்துள்ளார். இதனிடையே, அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரான புதிய குற்றவியல் சட்டங்களை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இபிஎஸ் Vs அண்ணாமலை: “அண்ணாமலை பொறுப்புக்கு வந்த பிறகு தமிழகத்தில் பாஜக வளர்ந்திருப்பது போன்ற மாயத் தோற்றத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்” என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, “அதிமுக கட்சி நன்றாக இருந்தாலும் கூட, தலைவர்கள் சரி இல்லை என்ற காரணத்துக்காக மக்கள் தண்டனை கொடுத்துள்ளனர். சட்டம் - ஒழுங்கு கெட்டுபோய் விட்டதால், விக்கிரவாண்டி இடைத்தேர்தலைப் புறக்கணிப்பதாக கூறுகிறார் எடப்பாடி பழனிசாமி. 2026-லும் தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு கெட்டு போயிருக்கும், அப்போதும் அதிமுக சட்டமன்றத் தேர்தலை புறக்கணிக்குமா?” என்று கூறியுள்ளார்.

ஆகஸ்ட் 11-ல் முதுநிலை ‘நீட்’ தேர்வு: முதுநிலை நீட் தேர்வு ஆகஸ்ட் 11-ஆம் தேதி நடைபெறும் என்று தேசியத் தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது. இளநிலை நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இரண்டு முறை முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், முதுநிலை நீட் தேர்வு ஆகஸ்ட் 11-ஆம் தேதி 2 ஷிஃப்டுகளில் நடைபெற உள்ளது.

சமூக நீதி - ஸ்டாலின் Vs அன்புமணி: “சமூக நீதிக்கு துரோகம் இழைப்பவர்களுக்கு பாடம் புகட்ட இண்டியா கூட்டணி வேட்பாளர் அன்னியூர் சிவாவுக்கு வாக்களியுங்கள்” என்று விக்கிரவாண்டி தொகுதி வாக்காளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் அவர், “சமூக நீதிக்கு எதிரான பாஜக கூட்டணியை தோற்கடிப்பது மூலமாக, சமூக நீதிக்கு துரோகம் இழைப்பவர்களுக்கு தக்க பாடம் புகட்டுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

அதேவேளையில், ‘சமூக நீதிக்கு துரோகம் இழைப்பவர்கள் யார் என்பதை என்பதை மக்கள் புரிந்து கொள்ள சில உண்மைகள்...’ என 10 கருத்துகளை முன்வைத்து தமிழக முதல்வர் ஸ்டாலினின் சமூக வலைதளப் பதிவுக்கு பதிலடி கொடுத்துள்ளார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ். அதில் அவர், “வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது, அந்த இட ஒதுக்கீட்டை நீக்காமல் ஓய மாட்டோம் என்று கூட்டம் நடத்தி முழக்கமிட்டது எந்த சமூகம்? அந்தக் கூட்டத்தின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மருத்துவர் ஜெய ராஜ மூர்த்தி யாருடைய மைத்துனர்?” என்றெல்லாம் கேள்விகளை எழுப்பியுள்ளார்.

பகுஜன் சமாஜ் தலைவர் வெட்டிக் கொலை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் மர்ம நபர்களால் சென்னையில் வெட்டி கொலை செய்யப்பட்டார். இது குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங். இவர் சென்னை பெரம்பூரில் வசித்து வந்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை வழக்கம்போல் ஆம்ஸ்ட்ராங் வீட்டில் இருந்துள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் அங்கு வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல், அவர் மீது சரமாரியாக அரிவாளால் வெட்டி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் படுகாயமடைந்த ஆம்ஸ்ட்ராங்கை மீட்ட அக்கம் பக்கத்தினர், உடனடியாக காவல் துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

சம்பவ இடத்துக்கு வந்த பெரம்பூர் மற்றும் செம்பியம் போலீஸார், ஆம்ஸ்ட்ராங்கை மீட்டு கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி ஆம்ஸ்ட்ராங் உயிரிழந்தார்.

இந்த கொலைச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். மேலும், சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்ட சிசிடிவி காட்சிகளை சேகரித்து போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். அசம்பாவிதச் சம்பவங்களைத் தவிர்க்க பெரம்பூர், செம்பியம் உள்ளிட்ட பகுதிகளில் போலீஸார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில், அரசியல் கட்சியின் மாநிலத் தலைவர் ஒருவர் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.