தூத்துக்குடி: அனுமதி இல்லாத மெக்னீசியம் சிலிக்கேட் சிந்தடிக் என்ற உணவு சேர்மத்தை பயன்படுத்தி, மீதமான பழைய உணவு எண்ணெய்யை சுத்திகரித்து அதனை உணவு தயாரிக்க பயன்படுத்தியதால் தூத்துக்குடி கேஎஃப்சி உணவகத்தின் உணவு பாதுகாப்பு உரிமத்தை உணவு பாதுகாப்பு துறையினர் தற்காலிகமாக ரத்து செய்துள்ளனர்.
இது தொடர்பாக உணவு பாதுகாப்பு துறையின் தூத்துக்குடி மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ச.மாரியப்பன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘தூத்துக்குடி உணவு பாதுகாப்பு அலுவலர் காளிமுத்து உள்ளிட்டோர் அடங்கிய குழுவினரால் தூத்துக்குடியில் பிரபலமான வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும் கேஎஃப்சி உணவகத்தில் நேற்று (வியாழக்கிழமை) திடீர் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது, உணவு எண்ணெய்க்கு அனுமதி இல்லாத மெக்னீசியம் சிலிகேட்- சிந்தடிக் என்ற உணவு சேர்மத்தை, ஏற்கெனவே பயன்படுத்தி மீதமாகி அப்புறப்படுத்த வேண்டிய பழைய உணவு எண்ணெய்யை சுத்திகரிக்கப் பயன்படுத்துவது கண்டறியப்பட்டது.
இதையடுத்து அங்கிருந்த 18 கிலோ மெக்னீசியம் சிலிக்கேட்-சிந்தடிக், அதைப் பயன்படுத்தி சுத்திகரிக்கப்பட்ட 45 லிட்டர் பழைய உணவு எண்ணெய் மற்றும் முன் தயாரிப்பு செய்து, 12 மணி நேரத்துக்கும் மேலாக பயன்படுத்தாமல் இருந்த, 56 கிலோ சிக்கன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இந்த முறைகேடு குறித்து விசாரணை நடத்தவும், பொது சுகாதாரத்துக்கு கேடு விளைவிக்கும் வகையில், இருப்பு பதிவேட்டிலேயே குறிப்பிடப்படாமல் தனியாக மெக்னீசியம் சிலிக்கேட்-சிந்தெட்டிக் என்ற உணவுச் சேர்மத்தை இருப்பு வைத்து, அதைப் பயன்படுத்தி, அனுமதியற்ற வகையில், பழைய எண்ணெயினை சுத்திகரிக்கப் பயன்படுத்தியது குறித்து விசாரணை நடத்திட ஏதுவாகவும் கேஎஃப்சி உணவகத்தின் உணவு பாதுகாப்பு உரிமமானது இடைக்காலமாக தற்காலிக ரத்து செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு விலக்கிக்கொள்ளப்படும் வரை அந்த உணவகம் இயங்கக் கூடாது. மீறும் பட்சத்தில், வளாகம் மூடி சீலிடப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது. மெக்னீசியம் சிலிக்கேட்-சிந்தெட்டிக் மற்றும் அதைப் பயன்படுத்தி, சுத்திகரிக்கப்பட்ட பழைய உணவு எண்ணெய் ஆகியவற்றிலிருந்து, உணவு மாதிரி எடுக்கப்பட்டு, பகுப்பாய்வு செய்யப்பட்டு, தொடர் சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும். இதேபோல் தூத்துக்குடி மாநகரில் சில இடங்களில் பானி பூரி கடைகள் ஆய்வு செய்யப்பட்டன. அக்கடைகளில் இருந்த பாணியில் செயற்கை நிறமிகள் இருப்பதற்கான ஆதாரங்கள் கண்டறியப்படவில்லை. இருப்பினும், கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற ஆய்வில், மூன்று பானி உணவு மாதிரிகளும், 3 பானிபூரி மசாலா உணவு மாதிரிகளும் எடுக்கப்பட்டு பகுப்பாய்விற்கு அனுப்பப்பட்டுள்ளது.அதன் அறிக்கை, வரப்பெற்ற பின்னர் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
உணவகங்களுக்கு எச்சரிக்கை: ஹோட்டல் மற்றும் ரெஸ்டாரண்ட் வணிகர்கள் ஒருமுறை பயன்படுத்தி ஆறவைத்த சமையல் எண்ணெய்யை மறுபடியும் சூடுபடுத்தி எக்காரணம் கொண்டும் பயன்படுத்தக் கூடாது. உணவு எண்ணெய்க்கு அனுமதியற்ற உணவு சேர்மத்தினை கொண்டு, பழைய எண்ணெய்யைத் சுத்திகரிக்கக் கூடாது. அவ்வாறு பயன்படுத்தியது கண்டறியப்பட்டால், உணவகம் உடனடியாக மூடப்படும்.
பானிபூரி வியாபாரிகள்: பானிபூரி விற்பனையாளர்கள் செயற்கை வண்ணங்களை பானியில் கலக்கக்கூடாது. உணவு பொருட்களை ஈக்கள், பூச்சிகள் மொய்க்காவண்ணமும், தூசிகள் விழாதவாறும் மூடி வைத்தும், கிருமி தொற்று ஏற்படாத சுகாதாரமான சூழலில் வைத்தும் பொதுமக்களுக்கு விற்பனை செய்திட வேண்டும். பணியாளர்கள் தலைத்தொப்பி, கையுறை, ஏப்ரன் உள்ளிட்ட பாதுகாப்பு கவசங்கள் அணிந்திருக்க வேண்டும். பானியையும், மசாலாவையும் தனித்தனியாக வழங்கி, நுகர்வோரே பூரியில் துளையிட்டுக்கொள்ள கேட்டுக்கொள்ள வேண்டும்.
தவிர்க்க இயலாத சூழலில், பணியாளர் கையுறை அணிந்து தான் பூரியில் துளையிட வேண்டும். அந்தக் கையுறையையும் குறைந்தது ஒரு மணிக்கொருமுறை மாற்ற வேண்டும். பொதுமக்களுக்கு உணவுப் பாதுகாப்பு தொடர்பான புகார்கள் ஏதும் இருப்பின், 94440 42322 என்ற மாநில உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் அலுவலக வாட்ஸ் அப் எண்ணுக்கோ, அல்லது உணவு பாதுகாப்புத் துறையின் TN Food Safety என்ற புகார் செயலி மூலமாகவோ, அல்லது https://foodsafety.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவோ புகார் அளிக்கலாம். புகார் அளிப்பவரது ரகசியங்கள் காக்கப்படும்’ இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.