‘நம்புங்கள்... இது சாலைதான்!’ - நெல்லை சந்திப்பு ரயில்வே பீடர் சாலையின் அவலம்


திருநெல்வேலி: திருநெல்வேலி சந்திப்பிலுள்ள ரயில்வே பீடர் சாலை படுமோசமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகிறார்கள். திருநெல்வேலி மாநகரில் பல்வேறு சாலைகளும் போக்குவரத்துக்கு தகுதியற்றதாக காணப்படுவது குறித்து தன்னார்வலர்கள் புகார் தெரிவித்து வருகிறார்கள்.

பாதாள சாக்கடை திட்டப் பணிகளுக்காக தோண்டப்பட்ட பிரதான சாலைகளும், தெருக்களில் உள்ள சாலைகளும் பெரும்பாலும் சீரமைக்கப்படாமல் காட்சியளிக்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்கு ஆளாகி வருகிறார்கள். ஒருசில இடங்களில் சாலைகள் தரமற்ற வகையில் அமைக்கப்பட்டுள்ளதால் அடிக்கடி சேதமடைவதாக பொதுமக்கள் குற்றஞ் சாட்டுகிறார்கள்.

திருநெல்வேலி சந்திப்பு ரயில்வே பீடர் சாலையின் அவலம்.
| படம்: மு. லெட்சுமி அருண் |

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தின் முகப்பு பகுதியில், காமராஜர் சிலை சந்திப்பிலிருந்து தென்புறமாக திருவள்ளுவர் ஈரடுக்கு மேம்பாலத்துக்கு செல்லும் ரயில்வே பீடர் சாலையில், 100 மீட்டர் தூரத்துக்கு வெறுமனே ஜல்லிக்கற்கள் மட்டுமே பரப்பி வைக்கப்பட்டிருக்கிறது.

இச்சாலை சீரமைப்பு பணிகளை அரைகுறையாக விட்டுள்ளதால் ஜல்லிக்கற்கள் பரப்பி வைக்கப்பட்டுள்ள பகுதியை சாலையாக பயன்படுத்த வேண்டிய கஷ்டத்துக்கு வாகன ஓட்டிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

இப்பகுதியில் சாலையைக் கடக்க வாகன ஓட்டிகள் படாதபாடு பட வேண்டியிருக்கிறது. சில வாகனங்களின் டயர்கள் சறுக்கி வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயமடைகிறார்கள். மேலும் கூர்மையான கற்களால் டயர்கள் கிழிபடுகின்றன. இச்சாலையை சீரமைக்கும் பணிகளை சம்பந்தப்பட்ட அரசுத்துறைகள் மேற்கொண்டு முடிக்க வேண்டும் என்பது வாகன ஓட்டிகளின் கோரக்கையாகும்.

x