தென்காசி: கடனாநதி அணையில் இருந்து கார் பருவ சாகுபடிக்கு நீர் திறப்பு


தென்காசி: தென்காசி மாவட்டம் கடனாநதி அணையில் இருந்து கார் பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறக்க தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்பேரில், கடனாநதி அணையில் இருந்து பாசனத்துக்கான தண்ணீரை ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர் இன்று திறந்து வைத்தார்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் கூறியதாவது, "கடனாநதி அணையிலிருந்து அரசபத்துகால், வடகுருவபத்துகால், ஆழ்வார்குறிச்சி தென்கால், ஆம்பூர் பெருங்கால், மஞ்சம் புளிகால், காக்கநல்லூர்கால், காங்கேயன்கால் ஆகிய கால்வாய்களின் கீழ் உள்ள 3987.57 ஏக்கர் பாசன நிலங்களுக்கு கார் பருவ சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இன்று முதல் 31.10.2024 வரை 119 நாட்களுக்கு வினாடிக்கு 125 கனஅடி வீதம் 664.60 மில்லியன் கன அடிக்கு மிகாமல் நீர் இருப்பு மற்றும் நீர்வரத்தைப் பொறுத்து தண்ணீர் திறந்து விடப்படும்.

இதன் மூலம் தர்மபுரம் மடம், சிவசைலம், ஆழ்வார்குறிச்சி, மேல ஆம்பூர், கீழ ஆம்பூர், மன்னார்கோவில், திருவாலீஸ்வரம், பிரம்மதேசம், பள்ளக்கால், புதுக்குடி, பனஞ்சாடி மற்றும் ரங்க சமுத்திரம் ஆகிய கிராமங்கள் பயன் பெறும். எதிர் வரும் நாட்களில் தென்மேற்கு பருவ மழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பருவமழை பொய்த்து நீர்வரத்து கிடைக்கப் பெறவில்லை என்றால், இருக்கும் நீரை அனுமதிக்கப்பட்ட பாசன நிலங்கள் முழுமைக்கும் பயன்பெறும் வகையில் சுழற்சி முறையில் வழங்கப்படும். நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் விநியோகப் பணியில் நீர்வளத்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்றார்.

இந்நிகழ்ச்சியில் நீர்வள ஆதாரத்துறை செயற்பொறியாளர் அண்ணாதுரை, உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணிய பாண்டியன், உதவி பொறியாளர்கள் உமாபதி, கணபதி, பேச்சரசன், அந்தோணி ராஜ், முகதாரணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

x