ஒற்றைத் தலைமையை அடைந்து ஓபிஎஸ்சை கட்சியிலிருந்து ஓரங்கட்டுவதற்காக நாள் குறித்து கபடி ஆடி வருகிறார் ஈபிஎஸ். தனது அரசியல் எதிர்க்காலத்துக்கு வந்திருக்கும் ஆபத்திலிருந்து தப்பிக்க சகல அஸ்திரங்களையும் ஈபிஎஸ்சுக்கு எதிராக ஏவி வருகிறார் ஓபிஎஸ். இன்னொரு புறம், “தொண்டர்கள் என் பக்கம் தான் இருக்கிறார்கள்” என்று கூறி தொண்டர் தரிசன பயணத்தில் ஈடுபட்டு வருகிறார் சசிகலா. ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையிலான மோதல் சசிகலாவுக்கு அதிமுகவில் வாசலைத் திறக்குமா?
அதிமுகவில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் ஒற்றைத் தலைமை களேபரக் காட்சிகள் கிளைமாக்ஸை நெருங்குகின்றன. ஜூலை 11 அன்று மீண்டும் நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை தீர்மானத்தைக் கொண்டு வந்து ஒரேயடியாக ஓபிஎஸ்சை ஓரங்கட்டுவதற்கான வேலைகளை ஈபிஎஸ் தரப்பு கச்சிதமாக செய்துவருகிறது. அதிமுகவின் 75 மாவட்டச் செயலாளர்களில் 69 பேரும், 74 தலைமைக் கழக நிர்வாகிகளில் 70 பேரும் 2,600-க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களில் 2,410 பேரும் ஈபிஎஸ் பக்கம் இருப்பதாகச் சொல்கிறார்கள்.
ஓபிஎஸ்சுக்கு 6 மாவட்டச் செயலாளர்கள், (ஓபிஎஸ் உள்பட) 2 தலைமைக் கழக நிர்வாகிகள், 200 பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமே உள்ளது. எனவே, அதிமுக பொதுக்குழுவில் ஈபிஎஸ்சுக்கு ஆதரவாக ஒற்றைத் தலைமை தீர்மானம் நிறைவேறுவதில் பெரிதாக சிக்கல் இருக்காது. என்றாலும், தனக்கு மெஜாரிட்டி இல்லாவிட்டாலும், சட்ட நடவடிக்கை மூலம் தன் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் முஸ்தீபுகளில் ஓபிஎஸ் ஈடுபட்டுள்ளார். ஜூலை 11-ல் கூட்டப்படும் பொதுக்குழு சட்ட விரோதம் என்று தேர்தல் ஆணையத்துக்குக் கடிதம் எழுதிய ஓபிஎஸ், உயர் நீதிமன்றத்தில் ஈபிஎஸ் தரப்புக்கு எதிராக அவதூறு வழக்கையும் தாக்கல் செய்ய வைத்திருக்கிறார்.
ஓபிஎஸ் - ஈபிஎஸ் மல்லுக்கட்டு உச்சத்தை அடைந்திருக்கும் நிலையில், குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கத் தூண்டிலோடு கிளம்பியிருக்கிறார், அதிமுக பொதுச்செயலாளர் என்று தன்னை அழைத்துக்கொள்ளும் சசிகலா. முன்பு, கோயில் கோயிலாக ஆன்மிகப் பயணம் சென்றுக்கொண்டிருந்த சசிகலா, கடந்த 26-ம் தேதி திருவள்ளூரில் தொண்டர் தரிசனத்தைத் தொடங்கினார். அப்போது திருத்தணியில் சாமி தரிசனம் செய்துவிட்டு கூலாக பேசிய அவர், “அதிமுக எனது தலைமையின் கீழ் வரும். ஒற்றைத் தலைமை விரைவில் ஏற்படும். 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்குள் அது ஏற்படும்” என்றார்.
அதிமுக தனது கட்டுப்பாட்டில் நிச்சயம் வரும் என்பதில் சசிகலா இன்னமும் உறுதியாக இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் உறுதிபடச் சொல்கிறார்கள். ஒருவகையில் பார்த்தால், ஓபிஎஸ் சசிகலாவுடன் இணக்கமான ஒரு போக்கைத்தான் கடைபிடித்து வருகிறார். கட்சிக்குள் ஈபிஎஸ்சின் பிடியும் ஆதிக்கமும் அதிகரித்த வேளையில், அவருக்கு செக் வைக்கும் விதமாகவே “சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது பற்றி தலைமைக் கழக நிர்வாகிகள் முடிவு செய்வார்கள்” என்று ஓபிஎஸ் கொளுத்திப் போட்டார்.
இன்று ஓபிஎஸ் சந்தித்துத்துவரும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் சசிகலாதான் மூலக் காரணம். அவருடைய முதல்வர் பதவி ஆசையால்தான் ஓபிஎஸ் பதவி விலக நேர்ந்தது. பிறகு, தர்மயுத்தக் காட்சிகள் எல்லாம் நடந்தேறியது. அப்படியிருந்தும் அதையெல்லாம் மறந்து எதிரிக்கு எதிரி நண்பன் என்ற ஃபார்முலா படி ஈபிஎஸ்சுக்கு செக் வைக்க சசிகலாவுக்கு மறைமுகமாக ஆதரவுக் கரம் நீட்டுகிறார் ஓபிஎஸ்.
ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம், விசாரணை ஆணையம் வேண்டும் என்றெல்லாம் 2017-ல் முழங்கிய ஓபிஎஸ், இந்த ஆண்டு ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகி, ‘சின்னம்மா மீது எந்த சந்தேகமும் இல்லை’ என்று நற்சான்றிதழ் அளித்ததும் சசிகலாவிடம் ஓபிஎஸ் சரண்டர் ஆகிவிட்டார் என்ற வாதத்துக்கு வலு சேர்த்தது. மேலும், ஓபிஎஸ்சின் சொந்த மாவட்டமான தேனியில் சசிகலாவுக்கு ஆதரவாக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தீர்மானம் நிறைவேற்றியதும் நடந்தேறியது. இதன்மூலம் இரட்டைத் தலைமையில் ஓபிஎஸ், சசிகலாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை என்றோ எடுத்துவிட்டார். இதை ஈபிஎஸ் தரப்பும் உணர்ந்தே வைத்திருக்கிறது.
ஆனால், இதை ஓபிஎஸ் வெளிப்படையாகக் காட்டிகொள்ளாமல் போனதற்குக் காரணம் ஈபிஎஸ். இன்று வரையிலும் சசிகலாவை கட்சியில் சேர்ப்பது பற்றி கேள்வி எழுப்பினாலே, “அதிமுகவுக்கும் சசிகலாவுக்கும் என்ன சம்பந்தம்?” என்று ஒற்றைக் கேள்வியைக் கேட்டு வாயடைக்க வைக்கிறார் ஈபிஎஸ். தன்னை முதல்வர் நாற்காலியில் உட்காரவைத்த சசிகலாவையே தந்திரமாக ஓடங்கட்டிய அவர், அதே பாணியில் தான் ஓபிஎஸ்சுக்கும் செக் வைத்திருக்கிறார்.
ஈபிஎஸ் தரப்பால் தொடர்ந்து அவமானங்களைச் சந்தித்து வரும் ஓபிஎஸ்சுக்கு சசிகலாவின் தலைமையை ஏற்பதில் எந்தச் சிக்கலும் இல்லை. தொண்டர் தரிசனம் புறப்பட்டிருக்கும் சசிகலாவுக்கு இதுவும் ஒரு சாதகமான அம்சம். அதனால்தான், “என் தலைமையில் அதிமுக செயல்படும்” என்று முன்பு பேசி வந்த சசிகலா, இப்போது அதிமுகவில் நடக்கும் பிரச்சினைகளால் திமுக பலனடைந்து வருவதைப் பற்றியும் பேச ஆரம்பித்திருக்கிறார்.
ஈபிஎஸ் முதல்வரான பிறகு, இரட்டைத் தலைமை ஏற்பட்ட பிறகு, மக்களவைத் தேர்தல், ஊரக உள்ளாட்சித் தேர்தல், சட்டமன்றத் தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் என அனைத்திலும் அதிமுக தோல்வியடைந்தது பற்றியும் பேசும் சசிகலா, “நமக்கெல்லாம் பொது எதிரி திமுக தான்” என அதிமுக தொண்டர்களை ஒற்றைப் புள்ளியில் ஒன்றாய் இணைக்கும் திட்டத்திலும் தற்போது இருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் சொல்கிறார்கள்.
அதிமுக தொண்டர்களை ஒருமுகப்படுத்த, சட்டமன்றத் தொகுதி வாரியாகவும் தொண்டர்களைச் சந்திக்கவும் சசிகலா திட்டமிட்டுள்ளார் என்றும் அதற்கான ஆலோசனைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் சசிகலா தரப்பு சொல்கிறது. தனது இந்தப் பிரச்சாரம் அதிமுக தொண்டர்களைத் தட்டியெழுப்பும் என்பது சசிகலாவின் எண்ணம். விரைவில் கரூரிலிருந்து இந்தப் பயணத்தை சசிகலா தொடங்குவார் என்கிறார்கள்.
ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையில் நடக்கும் மோதல்களால் தங்களுக்கும் ஒரு விடியல் பிறக்கும் என சசிகலா ஆதரவாளர்களும் மலைபோல் நம்புகிறார்கள். இந்த மோதல்களால் சசிகலாவுக்காக அதிமுகவின் கதவுகள் திறக்குமா? இது தொடர்பாக அதிமுக மூத்த நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம்.
“சசிகலாவுக்கு அதிமுகவில் சாதகமான அம்சம் எதுவும் நிலவவில்லை என்பதுதான் யதார்த்தம். 2017-ல் ஓபிஎஸ் சசிகலாவை எதிர்த்து தர்மயுத்தம் நடத்தியபோது, 11 எம்எல்ஏ-க்கள், 20 எம்பி-க்கள் ஆதரவு இருந்தது. மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு கம்மியாகவே இருந்தது. ஆனால், தொண்டர்கள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் அப்போது ஓபிஎஸ்சுக்கு ஆதரவு பெருகியிருந்ததை யாராலும் மறுக்கவோ மறக்கவோ முடியாது. அந்த ஆதரவு ஏன் கிடைத்தது என்றால், சசிகலாவை ஓபிஎஸ் எதிர்த்ததால் கிடைத்தது. சசிகலா முதல்வராவதை தடுக்க முயற்சித்ததால் கிடைத்தது.
அன்று ஓபிஎஸ் செய்ததைத்தான் இன்று ஈபிஎஸ் செய்கிறார். சசிகலா மூலம் ஈபிஎஸ் முதல்வராகியிருந்தாலும் அவரை கட்சிக்குள் வரவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார். அதனால்தான் அனைத்துத் தரப்புமே ஈபிஎஸ் பக்கம் திரண்டு நிற்கிறது. சசிகலா எதிர்ப்பு அல்லது ஆதரவு என்ற நிலைப்பாடுதான் ஓபிஎஸ் - ஈபிஎஸ் பக்கம் தொண்டர்களை திரளவோ விலகவோ செய்கிறது. அதை ஈபிஎஸ் புரிந்துகொண்டார். ஈபிஎஸ்சை எதிர்க்கவேண்டும் என்பதற்காக மறைமுகமாக சசிகலாவுக்கு ஆதரவு கொடுத்து ஓபிஎஸ் கரைந்து போயிருக்கிறார். தர்மயுத்தம் நடத்தியபோது அவருக்குப் பின்னால் இருந்தவர்களே இன்று ஈபிஎஸ் பக்கம் இருப்பது அதற்கு சாட்சி. சசிகலாவை மறைமுகமாக ஆதரிக்கும் ஓபிஎஸ்சுக்கே இந்த நிலைதான் என்றால், சசிகலாவுக்கு எப்படி சாதகமான சூழல் அதிமுகவில் நிலவும்?” என்று அந்த நிர்வாகிகள் கேள்வி எழுப்புகிறார்கள்.
அதிமுகவில் ஈபிஎஸ் ஒற்றைத் தலைமையாக உருவெடுத்து ஓபிஎஸ்சை ஓரங்கட்டினாலும் கிளைமாக்ஸ் 2024 மக்களவைத் தேர்தல்தான். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு வெற்றி என்பதே அதிமுகவுக்கு கனவாகிவிட்டது. ஓரணியாக ஒற்றைத் தலைமை உருவாகாமல் தேர்தலில் வெற்றி பெறுவது என்பது அதிமுகவுக்கு சோதனையாகவே இருக்கக்கூடும். அதேசமயம், 2024 தேர்தலில் அதிமுகவின் வெற்றிதான் அக்கட்சியின் எதிர்காலத்தையே தீர்மானிக்கும். 1989-ல் தாங்கள் பிரிந்துகிடந்ததால் பொது எதிரியான திமுக வெற்றிபெற்ற வரலாறு அதிமுகவினருக்குத் தெரியும். அதன் பின்னர் மனக்கசப்புகளை மறந்து தலைவர்கள் ஓரணியாகி, ஜெயலலிதா தலைமையில் அதிமுக வலிமை பெற்றது. அதுபோன்ற ஒரு தாக்கத்தை 2024 தேர்தலும் ஏற்படுத்தலாம். அதுவரை சசிகலா - ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையே உள்ள இடைவெளி குறையாது என்பதே நிதர்சனம்.