காவிரியில் தண்ணீர் திறந்து விடக் கோரி விவசாயிகள் உண்ணாவிரதம் @ தஞ்சாவூர்


தஞ்சாவூர் தலைமை தபால் அலுவலகம் முன்பாக காவிரியில் தண்ணீர் திறந்து விடக் கோரி விவசாயிகள் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தஞ்சாவூர்: காவிரியில் கர்நாடக அரசு உடனடியாக தண்ணீர் திறந்து விட வேண்டும் என்பதை வலியுறுத்தி தஞ்சாவூரில் விவசாயிகள் இன்று (வெள்ளிக்கிழமை) ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் முன்பாக தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கம் சார்பில் அதன் மாநில தலைவர் கே .எஸ். முகமது இப்ராகிம் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு விவசாய அமைப்புகள் உள்பட விவசாயிகள் பலர் கலந்து கொண்டுள்ளனர். உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படியும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப் படியும் கர்நாடக அரசு உடனடியாக காவிரியில் தமிழகத்துக்கான தண்ணீரைத் திறந்து விட வேண்டும்.

கர்நாடகா மாநிலத்தில் மழை பெய்து வருவதால் அங்கு போதுமான தண்ணீர் உள்ளது. எனவே காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் இருந்து வரும் தண்ணீரை உடனடியாக மேட்டூர் அணைக்கு திறந்து விட வேண்டும். தமிழக அரசு கர்நாடகா அரசிடம் பேசி உடனடியாக டெல்டா மாவட்ட பாசனத்திற்காக தண்ணீரை கேட்டுப் பெறவேண்டும். காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடகா அரசு மேகேதாட்டு அணை கட்டுவதை உடனடியாக கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

x