சென்னை: கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு கரும்பு நிலுவைத் தொகை வழங்கவும், ஆலைகளின் நடைமுறை மூலதனத்துக்காகவும் ரூ.94.49 கோடி வழிவகைக் கடன் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வேளாண் துறைஅமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 2022-23-ம் ஆண்டு அரவைப் பருவத்தில் 14.74 லட்சம் டன் சர்க்கரை உற்பத்தி செய்து மாநிலத்தின் சர்க்கரை தேவையான 15 லட்சம் டன் என்பதைப் பூர்த்தி செய்யும் நிலைக்கு முன்னேறி உள்ளது.
தமிழகத்தில் 2023-24-ம் ஆண்டு அரவைப் பருவத்தில் 12 கூட்டுறவு, 2 பொதுத்துறை, 16 தனியார் என மொத்தம் 30 சர்க்கரை ஆலைகள் இயங்கி வருகின்றன. கடந்த ஜூன் 15-ம் தேதி வரை 30.82 லட்சம்டன் கரும்பை அரவை செய்து, 8.92 சதவிகித சர்க்கரை கட்டுமானத்தில் 2.75 லட்சம் மெ.டன் சர்க்கரையை உற்பத்தி செய்துள்ளன.
சர்க்கரை விற்பனை மூலம் கரும்பு பணம் முழுமையாக வழங்க இயலாத சூழ்நிலையில் ஆலைகளுக்கு கரும்பு வழங்கியவிவசாயிகளுக்கு தமிழக அரசால்வழிவகைக் கடன் அனுமதிக்கப்பட்டு கரும்பு பணம் நிலுவையின்றி வழங்கி முடிக்கப்படுகிறது. அந்தவகையில், தமிழக அரசால் கடந்த2020-21-ல் ரூ.191.85 கோடியும், 2021-22-ல் ரூ.252.91 கோடியும், 2022-23-ல் ரூ.155.61 கோடியும் என மொத்தம் ரூ.600.37 கோடி வழிவகை கடனாக வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளால் நடப்பு 2023-24 அரவைப் பருவத்துக்கு வழங்க வேண்டிய ரூ.920.99 கோடியில் கடந்த ஜூன் 15-ம் தேதி வரை ரூ.835.73 கோடி வழங்கப்பட்டு, நிலுவையாக ரூ.85.26 கோடி விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டியுள்ளது.
எனவே, கரும்பு விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கும் வகையில் கரும்பு பணம் விவசாயிகளுக்கு நிலுவையின்றி வழங்கிடவும், ஆலைகளின் நடைமுறை மூலதன செலவுக்காகவும் ரூ.94.49 கோடி வழிவகைக் கடன் அனுமதித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.