புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக மதுரை ஐகோர்ட் கிளை வளாகத்தில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்


மதுரை: புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கறிஞர்கள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞர்கள் சங்கங்களான எம்எம்பிஏ, எம்பிஎச்ஏஏ சார்பில் உயர்நீதிமன்ற கிளை முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. எம்எம்பிஏ தலைவர் ஐசக்மோகன்லால், எம்பிஎச்ஏஏ தலைவர் ஆண்டிராஜ், மூத்த வழக்கறிஞர்கள் அஜ்மல்கான், லஜபதிராய், வழக்கறிஞர்கள் ஹென்றிடிபேன், ஜான் வின்சென்ட், வாமனன், அன்பரசு, முத்து கிருஷ்ணன் உள்பட பலர் பேசினர். இதனைத் தொடர்ந்து நாளை வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபடுகின்றனர்.

இது தொடர்பாக மூத்த வழக்கறிஞர் ஐசக் மோகன்லால் கூறுகையில்,"புதிய குற்றவியல் சட்டத்தில் எவ்விதமான பெரிய மாற்றங்களும் இல்லை. ஆங்கிலேயர் ஆட்சியில் இல்லாத அளவுக்கு, அதை விட மோசமான அடக்குமுறையை கொண்டு வரும் வகையில் திருத்தங்கள் உள்ளது. புதிய சட்டத்தில் ஜாமீன் கிடைப்பது கடினம் என்ற அளவில் உள்ளது. தீவிரவாதம் என்ற வார்த்தையின் கீழ், பல்வேறு செயல்முறைகள் கொண்டு வரப்பட்டு ஜாமீன் கிடைப்பது தடுக்கப்பட்டுள்ளது.

இந்தச் சட்டங்கள் சம்ஸ்கிருத வார்த்தைகளில் இயற்றப்பட்டிருப்பது அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. அவசர கதியில் சட்டத்தை நிறைவேற்றியுள்ளனர். இந்தச் சட்டத்தை திரும்பப் பெற்று, நாடாளுமன்றத்தில் மீண்டும் விவாதம் நடத்தி தேவையான மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.

x