திறப்பு விழா கண்ட பிறகும் பயன்பாட்டுக்கு வராத மதுரை அரசு மருத்துவமனை அறுவை சிகிச்சை அரங்குகள்!


படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

மதுரை: முதல்வரால் திறப்பு விழா கண்டு 100 நாட்கள் கடந்தும் இன்னும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ள ‘டவர் பிளாக்’ அறுவை சிகிச்சை அரங்குகள் முழுமையாக செயல்பாட்டிற்கு வரவில்லை. இந்த கட்டிடத்திற்காக வாங்கிய கடனுக்கு ஜப்பான் நிறுவனத்திடம் தமிழக அரசு வட்டி கட்டும் நிலையில் நோயாளிகள் அதன் பலனை பெற முடியாமல் தவிக்கிறார்கள்.

தென் தமிழகத்தின் முக்கியத்துவம் வாய்ந்த மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு தினமும் 15 ஆயிரம் வெளி நோயாளிகள் சிகிச்சைக்கு வருகிறார்கள். எப்போதும் 3,500 உள் நோயாளிகள் சிகிச்சையில் இருக்கிறார்கள். அதனால், 23 அதி நவீன அறுவை சிகிச்சை அரங்குகளுடன் கூடிய ஒருங்கிணைந்த மருத்துவ அறுவை சிகிச்சை பிரத்யேக கட்டிடம் அவசியம் ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

அதன் அடிப்படையில் தமிழக சுகாதாரத்துறை, ஜப்பான் நாட்டின் ஜைக்கா நிறுவனத்திடம் கடன் பெற்று ரூ.315 கோடியில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 6 மாடிகள் கொண்ட அதி நவீன அறுவை சிகிச்சை அரங்குகள் கொண்ட ‘டவர் பிளாக்’ பிரத்யேக கட்டிடம் பணிகள் கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஆரம்பிக்கப்பட்டது.

பணிகள் முழுமை பெறாத நிலையில் அவசர அவசரமாக கடந்த பிப்ரவரி 26-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்தக் கட்டிடத்தைத் திறந்து வைத்தார். ஆனால், இந்த கட்டிடத்தை முழுமையாக செயல்பாட்டிற்கு கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டது. இக்கட்டிடத்தில் பொது அறுவை சிகிச்சைப் பிரிவு, இருதயவியல் துறை, இருதய அறுவை சிகிச்சை பிரிவு, வாஸ்குலர் அறுவை சிகிச்சை பிரிவு, மயக்கவியல் துறை,
ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சைப் பிரிவு, கதிரியக்கவியல் பிரிவு, காது மூக்கு தொண்டை பிரிவு, சிறுநீரகவியல் துறை, அவசர சிகிச்சைப் பிரிவு போன்ற 10 முக்கிய மருத்துவ பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன.

இக்கட்டிடத்தில் 23 நவீன அறுவை சிகிச்சை அரங்குகள் அமைக்கப்பட்டன. சில சிகிச்சைப் பிரிவுகளுக்கு வெளி மற்றும் உள் நோயாளிகள் பிரிவுகள் தொடங்கப்பட்டாலும், திட்டமிட்டபடி அவசியம் தேவை என்றிருக்கும் மற்ற மருத்துவ பிரிவு அரங்குகள் முழுமையாக பயன்பாட்டிற்கு வரவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தகவல்களை பெற்ற சுகாதார செயற்பாட்டாளர் வெரோனிகா மேரி நம்மிடம் பேசுகையில், "இக்கட்டிடத்திற்கென்று பிரத்யேகமாக மொத்தம் 2,388 எண்ணிக்கையிலான மருத்துவ சாதன கருவிகள் மற்றும் உபகரனங்கள் அனுமதிப்பட்டது. அதில், இதுவரை 2,123 எண்ணிக்கை மட்டும் கிடைக்கபெற்றுள்ளது. மீதம் 265 சாதனங்கள் நிறுவப்படாமல் உள்ளது. இதனால் பல முக்கிய உயிர்காக்கும் அறுவை சிகிச்சை பிரிவுகள் தொடங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

மேலும், இப்பிரிவுக் கென்று பிரத்யேகமாக மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் தேவையென்று மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை நிர்வாகம் தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநரகத்திற்கு அனுப்பி வைத்த முன்மொழிவுகள் முழுமையாக ஒப்புதல் வழங்கப்பட்டு செயல் படுத்தாத நிலை உள்ளது. இதனால், ரூ.315 கோடி செலவில் கட்டப்பட்ட ஜைக்கா ‘டவர் பிளாக்’ கட்டிடத்தின் நோக்கமே சிதைந்துள்ளது. மறுபக்கம் ஜைக்கா நிறுவனத்திடம் பெற்ற கடனுக்கு வட்டியும் முதலும் கட்டி வருகிறது தமிழக அரசு.

வர வேண்டிய 265 உயிர்காக்கும் முக்கிய மருத்துவ உபகரணங்கள் மற்றும் கருவிகள் உடனடியாக நிறுவப்படவேண்டும். இந்த ‘டவர் பிளாக்’ அறுவை சிகிச்சை அரங்குகளுக்கு மருத்துவர்கள் மற்றும் இதர மருத்துவ பணியாளர்களும் நியமிக்கப்பட்டு 23 அதி நவீன சிசிச்சை அரங்குகளும் முழுமையாக செயல்பட வைக்க வேண்டும்’’ என்றார்.

அரசு மருத்துவமனை ‘டீன்’ (பொ) தர்மராஜிடம் இது குறித்து கேட்டபோது, "டவர் பிளாக் கட்டிடத்திற்கென்று தனி மருத்துவர், செவிலியர் பணியாளர்கள் கிடையாது. பழைய கட்டிடத்தில் உள்ள சிகிச்சைப் பிரிவுகள் அப்படியே இந்த புதிய கட்டிடத்திற்கு மாற்றப்படுகிறது. அதனால், கூடுதல் மருத்துவர்கள், செவிலியர், பணியாளர்கள் அவசியம் இல்லை.

ஆனால், தூய்மைப் பணியாளர்கள், லிஃப்ட் ஆபரேட்டர்கள், காவலாளிகள் போன்றோர் அடங்கிய ஒப்பந்த ஊழியர்களை நியமிக்க அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளோம். அவர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள். தற்போது இருதயவியல் அறுவை சிகிச்சை மற்றும் மருத்துவ சிகிச்சைப் பிரிவு உள், வெளி நோயாளிகள் பிரிவு மட்டும் டவர் பிளாக்கில் செயல்படுகிறது. விரைவில் மற்ற பிரிவுகளும் படிப்படியாக மாற்றப்படும்’’ என்றார்.

x