கரூரில் வாடகை பாக்கி வைத்துள்ள மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்


ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

கரூர்: கரூரில் வாடகை பாக்கி வைத்துள்ள மாநகராட்சி கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் பேருந்து நிலையம் பகுதியில் நடைபாதைகளை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கடைகளையும் மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.

கரூர் பேருந்து நிலையம், காமராஜர் மார்க்கெட், உழவர் சந்தை ஆகிய இடங்களில் மாநகராட்சிக்கு சொந்தமான கடைகள் உள்ளன. இவற்றில் முறையாக வாடகை செலுத்தாமல் பல லட்சம் பாக்கி வைத்துள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கடைகளுக்கு வாடகை பாக்கியைச் செலுத்தக்கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டது. கடைகளிலும் நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

இதில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ரூ.6 கோடிக்கு மேல் வரி செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளனர். இந்த நிலையில், கரூர் பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் வாடகை பாக்கி வைத்துள்ள மாநகராட்சி கடைகளுக்கு சீல் வைக்கும் பணி இன்று (ஜூலை 4ம் தேதி) மேற்கொள்ளப்பட்டது. கரூர் மாநகராட்சி உதவி வருவாய் அலுவலர் சாரங்க சரவணன் தலைமையில் மாநகராட்சி பணியாளர்கள் கடைகளுக்கு சீல் வைக்கும் பணிகளை மேற்கொண்டனர்.

கரூர் பேருந்து நிலையத்தில் வாடகை பாக்கி செலுத்தாமல் நீண்ட காலமாக பாக்கி வைத்துள்ள கடைகளுக்கு மாநகராட்சி சார்பில் சீல் வைக்கப்பட்டது. வாடகை பாக்கி வைத்துள்ள சலூன் கடையில் சிகை அலங்காரம் செய்து கொண்டிருந்த ஒருவரை வெளியே அனுப்பிவிட்டு அதிகாரிகள் கடையை மூடி சீல் வைத்தனர். அதேபோல் பேருந்து நிலையம் பகுதியில் நடைபாதைகளை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கடைகளையும் மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.

x