சென்னை: பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி உள்ளிட்டோருக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறைதண்டனையை ரத்து செய்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 1998-ம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்தனர். இதைக் கண்டித்து ஓசூர் அருகே பாகலூரில் அதிமுக உள்ளிட்ட எதிர்கட்சியினர் போராட்டம் நடத்தினர். அதில் வன்முறை வெடித்து அரசு பேருந்துகள் மற்றும் காவல்துறை வாகனங்கள் கல்வீசி தாக்கப்பட்டு, தீ வைத்து எரிக்கப்பட்டன. இதுதொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி உள்ளிட்ட 108 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
இந்நிலையில், கடந்த 2016-ம்ஆண்டு பாலகிருஷ்ணரெட்டி அதிமுக ஆட்சி காலத்தில் விளையாட்டுத்துறை அமைச்சராக பதவி வகித்தார். இதன்காரணமாக இந்த வழக்கு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து சென்னையில் உள்ள எம்.பி., எம்எல்ஏக்கள் மீதானவழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சிறப்புநீதிமன்றம் 2019 ஜன.7-ல் இந்த வழக்கில் பாலகிருஷ்ணரெட்டி உள்ளிட்ட 16 பேரை குற்றவாளிகள் என அறிவித்து பாலகிருஷ்ணரெட்டி உள்ளிட்டோருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதன்காரணமாக அவரது அமைச்சர் பதவி பறிபோனது.
இந்த தீர்ப்பை எதிர்த்து பாலகிருஷ்ணரெட்டி உள்ளிட்ட 16பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர்.
இந்த வழக்கு விசாரணை நீதிபதிஜி.ஜெயச்சந்திரன் முன்பாக நடந்துவந்தது. பாலகிருஷ்ண ரெட்டி தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.குமார்மற்றும் வழக்கறிஞர் ஜெ.கருப்பையா உள்ளிட்டோர் ஆஜராகி வாதிட்டனர். இதையடுத்து இந்த வழக்கில் நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் நேற்று தீர்ப்பளித்தார். அதில், ‘இந்த வழக்கில்காவல்துறையினரின் வாகனங்கள்எரிக்கப்பட்டதாக கூறினாலும், அதற்குரிய ஆதாரங்களை போலீஸார் தாக்கல் செய்யவில்லை. அரசு பேருந்துகள், போலீஸ் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டதாக கூறப்படுவதற்கும் போதிய ஆதாரங்கள் இல்லை. 100-க்கும் மேற்பட்டவர்கள் மீது குற்றம் சாட்டும்போது, அவர்களை அடையாளம் காண அடையாள அணிவகுப்பும் நடத்தவில்லை. போலீஸாரின் புலன் விசாரணையில் குறைபாடுகள் உள்ளன. பலவீனமான ஆதாரங்கள் உள்ளதால், பாலகிருஷ்ண ரெட்டி உள்பட 16 பேருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை ரத்துசெய்கிறேன்' என தீர்ப்பளித்து உள்ளார்