சென்னை: நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவதாக குற்றம்சாட்டிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், நீட் ரத்து கோரும் தமிழக அரசின் தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
10, 12-ம் வகுப்புகளில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்குவதற்கான 2-ம் கட்ட நிகழ்ச்சி, சென்னை, திருவான்மியூரில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 750-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஊக்கத் தொகை மற்றும் சான்றிதழை வழங்கி கவுரவித்தார்.
முன்னதாக மேடையில் அவர் பேசியதாவது: நீட் தேர்வால் தமிழகத்தில் உள்ள மாணவர்கள் குறிப்பாக கிராமத்தில் இருக்கும் ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின வகுப்பை சேர்ந்த மாணவர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர் என்பது தான் சத்தியமான ஒரு உண்மை.
நீட் தேர்வை 3 விஷயங்களாக பார்க்கிறேன். முதலில், மாநில உரிமைகளுக்கு எதிரானதாக இருக்கிறது. 2-வதாக ஒரே நாடு, ஒரே பாடத்திட்டங்கள், ஒரே தேர்வு. இது கல்வி கற்கும் நோக்கத்துக்கே எதிரானது. ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஏற்ற மாதிரி பாடத்திட்டங்கள் இருக்கவேண்டும். பன்முகத்தன்மை பலமே தவிர, பலவீனம் என்று சொல்ல முடியாது.
மாநில பாடத் திட்டத்தில் படித்தவர்களுக்கு என்சிஇஆர்டி பாடத் திட்டத்தில் தேர்வு வைத்தால் அது எப்படி சரி? 3-வதாக நீட் தேர்வில் குளறுபடிகள் நடந்ததாக செய்திகளில் பார்த்தோம். அதன் பிறகு நீட் தேர்வு மீதான நம்பகத்தன்மையே மக்கள் மத்தியில் சுத்தமாக போய்விட்டது. நாடு முழுவதும் நீட் தேர்வே தேவையில்லை என்பதுதான் செய்திகள் மூலமாக நாம் அனைவரும் புரிந்து கொண்ட விஷயம். இதற்கு நீட் விலக்குதான் உடனடி தீர்வு. நீட் ரத்து கோரி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மனப்பூர்வமாக வரவேற்கிறேன். மத்திய அரசு காலதாமதம் செய்யாமல், தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து விரைவில் தீர்வு காண வேண்டும்.
மேலும், கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு கொண்டு வருவதேநிரந்தர தீர்வாக இருக்கும். அதில் ஏதேனும் சிக்கல் இருந்தால், இடைக்கால தீர்வாக அரசியலமைப்புச் சட்டத்தை திருத்தி, சிறப்பு பொதுப்பட்டியலை உருவாக்கி அதில் கல்வி மற்றும் சுகாதாரத்தை சேர்க்க வேண்டும். மாநில அரசுகளுக்கு முழு சுதந்திரம் தரப்பட வேண்டும் என்பது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள். இதெல்லாம் உடனடியாக நடக்காது என்றும், நடக்க விடமாட்டார்கள் என்றும் எனக்குதெரியும். இந்த சந்தர்ப்பத்தில் என்னுடைய கருத்துகளை பகிர்ந்து கொள்ள ஆசைப்பட்டேன்.
மன அழுத்தம் வேண்டாம்: கற்பதே ஜாலிதான், கல்வி ஒரு கொண்டாட்டம். (Learning is Fun, Education isCelebration) ஜாலியா படிங்க, மன அழுத்தம் (Stress) வேண்டாம். வாய்ப்புகள் அவ்வளவு கொட்டி கிடக்கிறது. ஒன்றிரண்டை தவறவிட்டால் வருத்தப்படாதீங்க, கடவுள் இன்னொரு பெரிய வாய்ப்புடன் உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறார் என்று அர்த்தம். நல்லதே நடக்கும், வெற்றி நிச்சயம்.
இவ்வாறு விஜய் பேசினார்.
விழாவில், தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் என்.ஆனந்த், தென்சென்னை மாவட்டத் தலைவர் தி.நகர் அப்புனு, மாவட்டத் தலைவர்கள் பூக்கடை குமார், அம்பத்தூர் பாலமுருகன், கட்பீஸ் விஜய், இசிஆர் சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்