மதுரை: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை ‘டீன்’ ஒய்வு பெற்று 2 மாதங்களுக்கு மேலாகியும், தற்போது வரை புதிய ‘டீன்’ நியமிக்கப்படவில்லை. அதனால், நிர்வாகப் பணிகளில் பொறுப்பு ‘டீன்’ முக்கிய முடிவுகள் எடுக்க முடியாமல் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மதுரை அரசு மருத்துவக் கல்லூரியுடன் இணைந்த ராஜாஜி மருத்துவமனை ‘டீன்’ ஆக ரெத்தினவேலு இருந்து வந்தார். அவர், கடந்த 2 மாதம் முன் ஒய்வு பெற்ற நிலையில் புதிய ‘டீன்’ நியமிக்கப்படவில்லை. மக்களவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுலில் இருந்ததால் புதிய ‘டீன்’ உடனடியாக நியமிக்கப்பட முடியவில்லை என்று மருத்துவக் கல்வி இயக்குனரகம் தரப்பில் சொல்லப்பட்டது. ஆனால், தற்போது மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாக புதிய மத்திய அரசு மக்கள் பிரதிநிதிகள் பொறுப்பேற்று அவர்களும் தங்கள் பணிகளை பார்க்கத் தொடங்கி விட்டனர்.
ஆனால், மக்களவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகளை காரணம் காட்டி நிறுத்தி வைக்கப்பட்ட அரசு ராஜாஜி மருத்துமவனை ‘டீன்’ நியமனம் தற்போது வரை தள்ளிப்போய் கொண்டிருக்கிறது. பொறுப்பு ‘டீன்’ ஆக பேராசிரியர் தர்மராஜ் இருந்து வருகிறார். அவர் பொறுப்பாக பணியாற்றி வந்தாலும் நிரந்தர ‘டீன்’ போல் நிர்வாகப்பணிகளில் முக்கிய முடிவுகளை தைரியமாக எடுக்க முடியாததால் நிர்வாகப் பணிகளில் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், "பொதுவாக பொறுப்பு பதவிகளில் குறுகிய காலம் இருப்பவர்கள், நிர்வாகப் பணிகளில் தைரியமான முடிவுகளை எடுக்கமாட்டார்கள். அதற்கு தற்போது பொறுப்பு டீன் தர்மராஜூம் விதிவிலக்கல்ல. யோசித்துதான் முடிவெடுப்பார்கள். அதுவே ‘டீன்’ நியமிக்கப்பட்டால் அவர்கள் அந்த அதிகாரத்துடன் நிர்வாக முடிவுகளை எடுப்பார்கள்.
உடன் பணியாற்றுகிறவர்கள், தவறு செய்தால் தட்டிக்கேட்பார்கள். தற்போது உள்ள பொறுப்பு டீன் தர்மராஜ், வரும் ஆகஸ்ட்டில் ஒய்வு பெற உள்ளார். ஆனால், அவரால் பெரிய விவகாரங்களில் முடிவெடுக்க முடியவிலங்லை. ஆனால், நிர்வாகப் பணிகளை பிரச்சனையில்லாமல் கொண்டு செல்கிறார்." என்றனர்.
புதிய ‘டீன்’ 10 நாளில் நியமிக்க வாய்ப்பு: மருத்துவத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், "சுகாதாரத் துறை செயலாளராக இருந்து வந்த ககன் தீப் சிங் பேடி மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக சுப்ரியா சாஹூ நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இன்னும் பதவியேற்கவில்லை. அவர் பதவியேற்றப் பிறகு, காலியாக உள்ள மதுரை அரசு மருத்துவமனை டீன், தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனை ஆர்எம்ஓ-க்கள், மருத்துவக் கண்காணிப்பாளர்களுக்கு புதியவர்களை நியமித்து உத்தரவுகளை தயார் செய்வார்.
ஏற்கனவே, மதுரை அரசு மருத்துவமனை ‘டீன்’ பதவிக்கு தமிழக அரசின் பரிந்துரை பட்டியல் தயார் ஆகிவிட்டது. தற்போது சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் வெளிநாடு சென்றுள்ளதால் அவர் வந்த பிறகு அவரது அறிவுறுத்தலின்படி புதிய டீன் உத்தரவை தமிழக அரசு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், அடுத்த 10 நாட்களுக்குள் மதுரை அரசு மருத்துவமனைக்கு புதிய ‘டீன்’ நியமிக்கப் படுவார்" என்றார்.