3 ஆண்டுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களுக்கு கட்டாய இடமாறுதல்: பள்ளிக் கல்வித் துறை திட்டம்


சென்னை: பள்ளிகள், அலுவலகங்களில் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களை கட்டாய இடமாறுதல் செய்வதற்காக பள்ளிக் கல்வித் துறை கணக்கெடுத்து வருகிறது.

இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் இன்று அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்: "பள்ளிக் கல்வித் துறையில் அனைத்து வித இயக்குநரகங்கள், அலுவலகங்களின் நிர்வாகம் திறம்பட செயல்பட வேண்டியது அவசியமாகும். அதில் பணிபுரியும் பணியாளர்கள் 3 ஆண்டுகளுக்கு மேல் ஓரே அலுவலகத்தில், பணியிடத்தில் இல்லாமல் அவர்களை மாறுதல் செய்யவும், விருப்ப மாறுதல் ஆண்டுதோறும் நடத்தவும் தமிழக அரசால் உத்தரவிடப்பட்டு வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டன.

அதன்படி பள்ளிக்கல்வி அலுவலகங்கள், ஆசிரியர் தேர்வு வாரியம், இயக்குநரகங்கள் மற்றும் அரசுப் பள்ளிகளில் கடந்த ஜூன் 30-ம் தேதி நிலவரப்படி 3 ஆண்டுகளுக்கு மேல் நேர்முக உதவியாளர், கண்காணிப்பாளர், இள நிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் உட்பட பணியிடங்களில் வேலை செய்பவர்களின் பட்டியலை கணக்கெடுக்க வேண்டும்.

அந்த விவரங்களை பட்டியலாக தயாரித்து ஜூலை 5ம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். எந்த விவரங்களும் விடுபடாமல் முழுமையான வகையில் அறிக்கையை சமர்பிக்க அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது."இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.