துறையூரில் 300 ஆண்டுகள் பழமையான நாயக்க மன்னர் கால கல்வெட்டு கண்டெடுப்பு


மதுரை: திருச்சி துறையூர் வட்டம் கொப்பம்பட்டியிலுள்ள சப்தரிஷி ஈஸ்வரர்-குங்குமவல்லி அம்மன் கோயிலில் 300 ஆண்டுகள் பழமையான நாயக்க மன்னர் கால கல்வெட்டு இந்து சமய அறநிலையத்துறையின் சுவடி திட்டப் பணிக் குழுவினரால் கண்டறியப்பட்டுள்ளது.

இது குறித்து உலகத் தமிழாராய்ச்சி நிறுவன சுவடியியல் துறை பேராசிரியர் சு.தாமரைப் பாண்டியன் கூறியதாவது: "இந்து சமய அறநிலையத் துறையின் திருக்கோயில் சுவடித் திட்டப் பணிக்குழு சார்பில் கொப்பம்பட்டி சப்தரிஷி ஈஸ்வரர் கோயிலில் கள ஆய்வு செய்ததில் ‘கொப்ப மாபுரித் திருவூடல்’ எனும் பழைய இலக்கிய ஓலைச்சுவடியும், கல்வெட்டும் கண்டறியப்பட்டது. ஓலைச்சுவடியை நூலாக்கும் பணி நடந்து வருகிறது.

இக்கல்வெட்டு கோயில் கருவறையின் வெளிப்புறத்தில் அமைந்துள்ளது. அதே கல்வெட்டு தகவல், கோயிலின் நுழைவு வாயிலின் தெற்குப் பகுதியிலும், தளிகை ஆற்றின் கிழக்குப் பகுதியிலும் உள்ள கல்வெட்டுகளில் உள்ளது. இக்கல்வெட்டை துறையூர் பாளையத்தின் ஜமீன்தார் நல்லப்ப ரெட்டியார் கி.பி. 1718-ல் வைத்துள்ளார். கி.பி.1592-ல் விஜயநகர பேரரசின் மதுரை பகுதிக்கு ஆளுநராக விஸ்வநாத நாயக்கர் நியமிக்கப்பட்டார்.

இவர் அரியநாத முதலியாரின் உதவியுடன் பாளையக்காரர் முறையை அறிமுகம் செய்தார். தனது நிர்வாகத்திற்குட்பட்ட பகுதியை 72 பாளையங்களாக பிரித்தார். பிற்காலத்தில் கி.பி.1801-ல் பாளையப்பட்டு முறை ஜமீன்தாரி முறையாக மாற்றப்பட்டது. விஜய நகர சாம்ராஜ்யத்தின் பகுதியான ‘மனுகுண்டி’ நகரிலிருந்து வந்த வேமரெட்டி வம்ச பரம்பரையினர் துறையூர் பகுதியை ஜமீன்தார்களாக இருந்து ஆட்சி செய்துள்ளனர்.

இவர்கள் 'விஜயவெங்கிடாசலபதி' என பட்டம் சூட்டி துறையூரை 18 பரம்பரைக்கும் மேலாக ஆண்டுள்ளனர். கி.பி.17ம் நூற்றாண்டில் துறையூர் பாளையக்காரரான வல்லக்கோல் எர்ரம ரெட்டியாரின் மகனான நல்லப்ப ரெட்டியார் பாழடைந்து கிடந்த சப்தரிஷி ஈஸ்வரர் கோயிலைப் புதுப்பித்து மறுபடியும் கட்டியுள்ளார். மேலும் சில கோயில்களை கட்டியதாகவும் அறிய முடிகிறது.

கல்வெட்டில் நிலதானச் செய்தி:"கி.பி.1718-ல் வைகாசி மாதம் 13-ம் தேதியில் ஸ்ரீவீரவேங்கட தேவ மகாராயர் கனகிரி நகரத்தை ஆண்டார். அப்போது திருச்சிராப்பள்ளியின் வடக்கில் அமைந்த துறையூர் சீமையில் மூலைபத்து கொப்பமாபுரி சப்தரிஷி ஈஸ்வரர்-குங்கும வல்லியம்மன் கோயில் சுவாமி பூசைக்குரிய நெய்வேத்தியத்திற்கு துறையூர் பாளையக்காரர் நிலதானம் வழங்கியுள்ளார். அவரின் மூதாதையரான வல்லக் கோல் நல்லப்ப ரெட்டியார் (தாத்தா) பெயர் முதலில் உள்ளது. அதன்பின் ந.ஏர்ரம ரெட்டியார் மகன் நல்லப்ப ரெட்டியார் கோயிலுக்கு நெய் வேத்தியம் பண்ண நிலதானம் செய்தார் என்று குறிப்புகள் உள்ளது."இவ்வாறு அவர் கூறினார்.