தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாநகராட்சிக் குப்பை கிடங்களில் 3-வது முறையாக இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதை தீயணைப்புத் துறையினர் 3 மணி நேரத்தில் அணைத்தனர்.
தஞ்சாவூர் ஜெபமாலைபுரம் குப்பைக் கிடங்கில் தஞ்சாவூர் மாநகராட்சியில் உள்ள 51 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்பட்டு தரம் பிரிக்கப்பட்டு வருகிறது. சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த குப்பைக் கிடங்கில் தற்போது சுமார் 10 ஏக்கரில் குப்பைகள் மலைபோல் தேங்கியுள்ளது. இந்த குப்பைக் கிடங்கில் ஆண்டுதோறும் கோடை மற்றும் காற்று காலங்களில் தீ விபத்து ஏற்படுவது வழக்கம்.
அப்படி தீப்பிடிக்கும் காலங்களில் சீனிவாசபுரம், மேலவீதி, மேல அலங்கம் உள்ளிட்ட 5 கி.மீ. தூரத்திற்கு சுற்றுப் பகுதிகளில் புகைமூட்டம் காரணமாகப் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் பல்வேறு உபாதைகள் ஏற்படுவதால் இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் எனப் பல ஆண்டுகளாகப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இது நாள் வரை எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
இந்த நிலையில் கடந்த மாதம் 27-ம் தேதி இந்தக் குப்பை கிடங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக 3 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் மாநகராட்சியின் தண்ணீர் லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டு வந்து தீயை அணைத்தனர். இதைதொடர்ந்து, அண்மையில் 2-வது முறையாக லேசான தீ விபத்து ஏற்பட்டு அதையும் உடனடியாக அணைத்தனர்.
இந்நிலையில், 3-வது முறையாக அந்த குப்பை கிடங்கில் இன்றும் தீவிபத்து ஏற்பட்டது. இதனையறிந்த மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி, மாநகர் நல அலுவலர் சுபாஷ்காந்தி, மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் தீயணைப்புத் துறையினர் 3 தீயணைப்பு வாகனங்களில் சென்று 3 மணி நேரத்தில் தீயை அணைத்தனர். மேலும், அந்தப் பகுதியில் வசிப்பவர்களுக்கு மருத்துவ உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக மாநகர் நல அலுவலர் சுபாஷ்காந்தி நம்மிடம் பேசுகையில், ''கடந்த வாரம் பற்றி எரிந்த தீயானது முழுமையாக அணைக்கப்படாமல் சற்று புகைந்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அதனால், இன்று காலை 11 மணியளவில் மீண்டும் குப்பைக் கிடங்கில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. எனினும் 80-க்கும் மேற்பட்ட மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் உதவியுடன் தீயணைப்பு துறையினர் 3 மணி நேரத்தில் தீயை அணைத்தனர்.
தீ விபத்தை அடுத்து குப்பைக் கிடங்கின் சுற்றுப்பகுதியில் உள்ள 345 வீடுகளில் வசிப்பவர்களுக்கு 5 மருத்துவக் குழுவினர் தனித்தனியாக மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு, அவர்களுக்கு முக கவசமும் தேவைப்படுபவர்களுக்கு சுவாசக் கருவியும் வழங்கி வருகிறார்கள். இந்த குப்பைக் கிடங்கு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பது தொடர்பாக அரசு தான் முடிவு எடுக்க வேண்டும்'' என்றார்.