இடமாறுதலை நிறுத்தி வைக்கக் கோரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் @ கோவில்பட்டி


கோவில்பட்டி: உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் ஆசிரியர்கள் இடமாறுதலை நிறுத்தி வைக்க வலியுறுத்தி தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் இன்று காலை கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய பட்டியலில் இருந்த ஆசிரியர் முன்னுரிமை இடமாறுதலை மாநில பட்டியலில் இணைத்து வெளியிட்ட அரசாணை 243-ஐ ரத்து செய்ய வேண்டும், பதவி உயர்வு தொடர்பான உச்ச நீதிமன்ற வழக்கு முடியும் வரை இடமாறுதல் கலந்தாய்வு நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று காலை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் இயக்கங்களில் கூட்டு நடவடிக்கை குழுவினர் டிட்டோ - ஜாக் கோவில்பட்டியில் உள்ள மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழக ஆசிரியர் கூட்டணி மாநில துணை பொதுச்செயலாளர் செ.கணேசன், ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் சு.செல்வராஜ் ஆகியோர் இந்தப் ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்தனர். தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் மா.சிவன் முன்னிலை வகித்தார்.

தமிழக ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு உறுப்பினர் ரா.ராம மூர்த்தி, மாவட்ட செயலாளர் ரா.ஜீவானந்தம் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இதில் திரளான ஆசிரியர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

தொடர்ந்து அவர்கள் தொடக்கக் கல்வி மாவட்ட அலுவலகத்துக்குள் அமர்ந்து உள்ளிருப்புப் போராட்டத்தை தொடர்ந்தனர். தகவலறிந்து வந்த கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் செந்தில் வேல் மற்றும் போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் அனுப்பி வைத்தனர்.