முதல்போக பாசனத்திற்காக வைகை அணையில் நீர் திறப்பு: 3 ஆட்சியர்கள் கூட்டாக திறந்து வைத்தனர்


மதுரை: தேனி மாவட்டம் வைகை அணையிலிருந்து இருபோக பாசனத்தின் முதல் போகத்துக்கான தண்ணீரை தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா,மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி ஆகியோர் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணகுமார் முன்னிலையில் இன்று திறந்துவைத்தனர்.

தமிழக முதல்வரின் உத்தரவின்படி, தேனி மாவட்டம், வைகை அணையிலிருந்து பெரியாறு பாசனப்பகுதியில் இரு போக பாசனப் பகுதியில் முதல் போக சாகுபடிக்காக இன்று தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் பாசன பரப்பான 45,041 ஏக்கர் நிலங்களுக்கு விநாடிக்கு 900 கன அடி வீதம் 45 நாட்களுக்கு முழுமையாகவும், 75 நாட்களுக்கு முறை வைத்தும் மொத்தம் 120 நாட்களுக்கு 6,739 மில்லியன் கன அடி நீர் இருப்பு மற்றும் நீர்வரத்தை பொறுத்து தண்ணீர் திறக்கப்படும்.

வைகை அணையிலிருந்து தண்ணீர் திறப்பதால் திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டத்திற்குட்பட்ட 1,797 ஏக்கர் நிலங்களும், மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டத்திற்குட்பட்ட 16,452 ஏக்கர் நிலங்களும், மதுரை வடக்கு வட்டத்திற்குட்பட்ட 26,792 ஏக்கர் நிலங்களும் என மொத்தம் 45,041 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.