“கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும்” - கல்வி ஊக்கத் தொகை வழங்கும் விழாவில் விஜய் வலியுறுத்தல்


விஜய்

சென்னை: கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை, திருவான்மியூரில் உள்ள தனியார் மண்டபத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இரண்டாம் கட்டமாக கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா இன்று (புதன்கிழமை) நடைபெற்றது. இதில் பங்கேற்க கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய், காலை 9.45 மணியவில் மண்டபத்துக்கு வருகை தந்தார். அவரை கண்டதும் மாணவர்கள் ஆரவாரம் செய்தனர். தொடர்ந்து மாணவர்களுடன் அமர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

மாணவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்குவதற்கு முன்பு மேடையில் விஜய் பேசியதாவது: "நான் இன்று ஏதும் பேச வேண்டாமென நினைத்தேன். ஆனால் முக்கியமான விஷயம் குறித்து பேசவில்லையென்றால் அது சரியாக இருக்காதென எனக்கு தோன்றியது. அது என்னவாக இருக்கும் என நீங்களே யூகித்திருப்பீர்கள். ஆம் ‘நீட்’. தமிழகத்தில் இருக்கும் ஏழை, எளிய பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மாணவர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர் என்பது நிதர்சனமான உண்மை.

நீட் தொடர்பாக 3 பிரச்சினை இருப்பதாக நான் பார்க்கிறேன். மாநில உரிமைகளுக்கு எதிரானதாக நீட் இருக்கிறது. 1975-க்கு முன்பு கல்வி மாநில பட்டியலில் தான் இருந்தது. அதன் பிறகு மத்திய அரசு கல்வியை பொதுப்பட்டியலில் சேர்த்தது. அங்கிருந்து தான் முதல் பிரச்சினை தொடங்கியது. இரண்டாவதாக ஒரே நாடு ஒரே பாடத்திட்டம் ஒரே தேர்வு இதை அடிப்படையிலேயே கல்வி கற்கும் நோக்கத்துக்கு எதிரானதாக நான் பார்க்கிறேன். மாநிலங்களுக்கு ஏற்ற வகையில் பாடத்திட்டங்கள் இருக்க வேண்டும்.

இதை மாநில உரிமைகளுக்காக மட்டுமே கேட்கவில்லை. பல்வேறு கண்ணோட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பது எனது பார்வை. பன்முகத்தன்மை பலமே தவிர பலவீனமல்ல. மாநில கல்வித்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு என்.சி.இ.ஆர்.டி பாடத்திட்டத்தில் தேர்வு வைத்தால் எப்படி? கிராமப்புற மாணவர்களுக்கு இது எவ்வளவு கடினமான விஷயம். மே 5-ம் தேதி நடந்த நீட் தேர்வில் பல்வேறு குளறுடிகள் நடந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தது. இதனால் நீட் தேர்வு குறித்து மக்களிடம் இருந்த நம்பகத்தன்மை முற்றிலும் போய்விட்டது. இதன் மூலம் நீட் தேர்வு தேவையில்லை என்பதை தான் நாம் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

சரி இதற்கு என்னதீர்வு? இதற்கு நீட் விலக்கு தான் உடனடி தீர்வு. நீட் விலக்கு குறித்து சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மனப்பூர்வமாக வரவேற்கிறேன். தமிழக மக்கள் உணர்வுகளுக்கு மதிப்பளித்து கால தாமதம் செய்யாமல் இதற்கு தீர்வு காண வேண்டும் என மத்திய அரசை கேட்டுக் கொள்கிறேன்.

இதற்கு நிரந்தர தீர்வு என்னவென்றால் கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் அதில் ஏதேனும் சிக்கல் இருந்தால் இடைக்கால தீர்வாக இந்திய அரசமைப்பு சட்டத்தை திருத்தி, சிறப்பு பொதுப்பட்டியல் ஒன்றை உருவாக்கி அதில் கல்வி மற்றும் சுகாதாரத்தை சேர்க்க வேண்டும்.

இப்போது இருக்கும் பொதுப்பட்டியலில் உள்ள துறைகளில் என்ன சிக்கலென்றால் மாநில அரசுக்கு அதிகாரம் இருந்தாலும் கட்டுப்பாடு முழுக்க மத்திய அரசிடமே இருக்கிறது. மாநில அரசுகளுக்கு முழு சுதந்திரம் தரப்பட வேண்டும் என்பதே என்னுடைய வேண்டுகோள். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள எய்ம்ஸ், ஜிப்மர் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு வேண்டுமானால் நீட் தேர்வு நடத்தி கொள்ளலாம். இதெல்லாம் உடனடியாக நடக்காது என்றும், நடக்க விடமாட்டார்கள் என்றும் எனக்கு தெரியும்.

இந்த சந்தர்ப்பத்தில் என்னுடைய கருத்தை பகிர்ந்து கொள்ள விரும்பினேன். இது நீட் குறித்த எனது கருத்து இது. Learning is fun education is celebration. ஜாலியா படிங்க எந்த அழுத்தத்தையும் எடுத்துக்காதீங்க... இந்த உலகம் ரொம்ப ரொம்ப பெரியது. வாய்ப்புகள் அவ்வளவு கொட்டி கிடக்கிறது.

ஒன்றிரண்டை தவற விட்டால் வருத்தப்படாதீங்க... கடவுள் இன்னொரு பெரிய வாய்ப்பை வைத்து உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறார் என்று அர்த்தம். அது என்னவென்று கண்டுபிடியுங்கள். தன்னம்பிக்கையோட இருங்க... நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம்". இவ்வாறு விஜய் பேசினார்.