திருவள்ளூர் | கூட்டுக் குடிநீர் திட்டப் பணியால் விவசாயத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது: ஆட்சியர் தகவல்


திருத்தணி: வெளியகரம் பகுதியில் லவா ஆற்றுப் படுகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் கூட்டுக் குடிநீர் திட்டப்பணியால் பள்ளிப்பட்டு பகுதிகளில் விவசாயத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என, திருவள்ளூர் ஆட்சியர் பிரபு சங்கர் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே வெளியகரம் பகுதியில் லவா ஆற்றுப்படுகையில் 6 ராட்சத கிணறுகள் அமைத்து குழாய் மூலம் ஆர்.கே.பேட்டை, திருத்தணி ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 9 ஊராட்சிகளுக்கு குடிநீர் வழங்க ஏதுவாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

ரூ.45 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் இப்பணிக்கு, பள்ளிப்பட்டு பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து விவசாயம் முற்றிலும் பாதிக்கப்படும் எனக் கூறி, பள்ளிப்பட்டு மற்றும் வெளியரகம், திருமலைராஜ்பேட்டை, ராமச்சந்திராபுரம், வெங்கட்ராஜ்குப்பம், குமாரராஜுபேட்டை உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் தொடர்பாக நேற்று திருவள்ளூர் ஆட்சியர்பிரபுசங்கர் ஆய்வு செய்தார். அப்போது, அவர் பணியை துரிதமாகவும், திறம்படவும் முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அறிவுறுத்தினார். தொடர்ந்து, ஆட்சியர் பிரபுசங்கர், பொதுமக்கள் மத்தியில் தெரிவித்ததாவது:

வெளியகரம் லசா ஆற்றுப்படுகையில் கிணறுகள் அமைத்து, குழாய்கள் மூலம் திருத்தணி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டஎஸ். கார்த்திகேயபுரம், கன்னிகாபுரம், தாடூர், சிறுகனூர், எஸ். அக்ரஹாரம், பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சி.எஸ்.கண்டிகை, வங்கனூர், செல்லத்தூர் வி.எஸ். ஜி.புரம் ஆகிய கிராமங்களுக்கு நாள்தோறும் 2.76 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்குவதற்காக கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

குடிநீர் ஆதாரத்துக்கான சிறப்பான இத்திட்டத்தால் 9 கிராம மக்களின் குடிநீர் பிரச்சினை தீரும். பள்ளிப்பட்டு பகுதியில் விவசாயத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் அமலதீபன், உதவி பொறியாளர்.சம்பத்குமார், உதவி நிர்வாக பொறியாளர் ஜெயசுதா, திருத்தணி கோட்டாட்சியர் தீபா, நீர்வளத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.