இந்துக்கள் குறித்து சர்ச்சை பேச்சு ராகுல் காந்தியின் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது: தமிழிசை குற்றச்சாட்டு


தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு நேற்று பேட்டிஅளித்த தமிழிசை சவுந்தரராஜன்.

தூத்துக்குடி / திருநெல்வேலி: நாடாளுமன்றத்தில் ராகுல்காந்தி பேசியது, அவரது முதிர்ச்சியின்மையை காட்டுவதாக தெலங்கானா மாநில முன்னாள் ஆளுநரும், பாஜக மூத்த தலைவருமான தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

தூத்துக்குடி விமான நிலையம் மற்றும் திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: இந்துக்கள் என்றாலே வன்முறையாளர்கள் என்று கூறி, நாடாளுமன்றத்தில் ஒட்டுமொத்த இந்துக்களையும் ராகுல் காந்தி நேற்று முன்தினம் மோசமாக விமர்சித்துள்ளார். அவருக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாட்டுக்காக உயிரிழந்த அக்னிவீரர்களுக்கு இழப்பீடு வழங்கவில்லை என்ற தவறான தகவலை ராகுல் காந்தி கூறினார். அதற்கு மத்திய பாதுகாப்புத் துறை ராஜ்நாத்சிங், அக்னி வீரர்களது குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது, அவர்களது உயிருக்கு ஈடு இணை எதுவுமில்லை என்று பதில் அளித்தார்.

விவசாயிகளின் விளை பொருட்களுக்கு குறைந்த விலை நிர்ணயம் செய்யப்படுவதாக, மற்றொரு தவறான தகவலையும் ராகுல் காந்தி தெரிவித்தார். அதற்கும் அமைச்சர் பதில் அளித்துள்ளார். ராகுல் காந்தியின் கருத்துகளுக்கு, உள்துறை அமைச்சரும் பதில் அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

ராகுல் காந்தி தனக்கு விளம்பரம் தேடிக் கொள்ளும் நோக்கத்திலேயே எதிர்மறையாகப் பேசியுள்ளார். இது அவரது முதிர்ச்சியின்மையைக் காட்டுகிறது.

இந்துக்களின் உணர்வுகள் புண்படும் வகையில் ராகுல் காந்தி பேசியபோது தமிழகம் மற்றும் புதுவையைச் சேர்ந்த 40 எம்.பி.க்கள் எதிர்ப்புக் குரல் கொடுக்காதது வேதனை அளிக்கிறது. இந்த 40 பேரும் நாடாளுமன்றத்துக்கு சென்றதால், தமிழகத்துக்கு எந்தப் பலனும் இல்லை. தூத்துக்குடி எம்.பி. கனிமொழி, திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன் மதுவிலக்கு பற்றி பேசினார். தற்போது எதுவும் பேசுவதில்லை.

கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயத்தால் 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், தமிழக முதல்வரோ, சம்பந்தப்பட்ட துறை அமைச்சரோ அங்கு சென்று,பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கவில்லை. கள்ளச் சாராய விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்த, தமிழக அரசு ஒத்துழைக்க வேண்டும்.

திருச்செந்தூர் முருகன் கோயிலில் கட்டுமானப் பணிகள் காலதாமதமாக நடைபெறுகின்றன. பக்தர்களுக்கு போதுமான வசதிகளை செய்யவில்லை. திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்ம மரணவழக்கை சிபிஐ வசம் ஒப்படைத்து,குற்றவாளிகளைக் கைது செய்யவேண்டும். மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.