சென்னை: கோயம்பேடு மெட்ரோஜோன் அடுக்குமாடி குடியிருப்பில் சுற்றித்திரியும் தெருநாய்களை அப்புறப்படுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி நிர்வாகம் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் பதிலளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஷபீனா பாத்திமா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், "தமிழகத்தில் சமீபகாலமாக தெரு நாய்கள் குழந்தைகளை துரத்தி, துரத்தி கடித்து குதறும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. சென்னை கோயம்பேட்டில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியான மெட்ரோஜோனில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
இப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் இரவு, பகல் பாராமல் சுற்றித்திரிந்து, வருவோர் போவோரை துரத்தி துரத்தி கடிக்கின்றன. ஏராளமான சிறுவர், சிறுமியர் வசிக்கும் இந்த குடியிருப்பில் தெரு நாய்களை அப்புறப்படுத்தக் கோரி குடியிருப்பு சங்க நிர்வாகிகள் மாநகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் இரவு நேரங்களில் நடைப்பயி்ற்சி மேற்கொள்ள முடியாமல் பெண்களும் சிரமமடைந்து வருகின்றனர். எனவே அசம்பாவிதம் எதுவும் நடைபெறுவதற்குள் மெட்ரோஜோன் குடியிருப்புப் பகுதியில் சுற்றித்திரியும் தெரு நாய்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க மாநகராட்சி நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும்’ என கோரியிருந்தார்.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன், நீதிபதி முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், தடுப்பூசி போடப்படாத இந்த தெரு நாய்களை பிடித்துச் செல்ல மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தாலும் சமூக ஆர்வலர்கள் எனக் கூறும் சிலர் நாய்களை ஊழியர்கள் பிடித்துச் செல்வதை தடுத்து வருகின்றனர் என்றும், தெரு நாய்களை துன்புறுத்துவதாக ‘ப்ளு-கிராஸ்’ அமைப்பி்ன் மூலம் வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுப்போம் எனவும் மாநகராட்சி ஊழியர்களை மிரட்டி வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
அதே சமயம், மாநகராட்சி நிர்வாகம் தரப்பில், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என பதிலளிக்கப்பட்டது. அதைப்பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணையை 8 வாரங்களுக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.