விழுப்புரம்: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஜூலை 10-ம் தேதி நடைபெறுகிறது. இதில் திமுக, பாகம, நாதக ஆகிய கட்சிகள் போட்டியிடுவதால் தமிழகமே இத்தொகுதியின் தேர்தல் முடிவை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளது.
தலைவர்கள் பங்கேற்கும் கூட்டங்களில் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதால் ஒவ்வொரு கூட்டத்திற்கும் அதிகபட்சமான பெண்களை அழைத்துவர வாகன வசதி உள்ளிட்ட செலவுகள் தாராளமாக செய்யப்படுகின்றன. இதனால் தினமும் பிசியாகவே இருக்கும் பெண்கள் ஒரு நாளைக்கு இரண்டுக்கும் மேற்பட்ட கூட்டங்களுக்குச் சென்று பணம் பார்த்து வருகிறார்கள். பெண்கள் எல்லாம் இப்படி அரசியல் கூட்டங்களுக்கு கூட்டம் காட்ட கிளம்பிவிடுவதால் தற்போது விவசாயப் பணிகளுக்கு ஆள் கிடைக்காமல் அந்தப் பணிகள் முடங்கியுள்ளது.
தேர்தல் முடிந்தால் தான் இவர்கள் எல்லாம் மீண்டும் விவசாய வேலைக்குத் திரும்புவார்கள். இதனால், ஏற்கெனவே நட்ட வயல்களில் களைபறிக்க ஆள் கிடைக்காமலும் புதிதாக நடவேண்டிய வயல்களுக்கு நாற்று நடுவதற்கு ஆள் கிடைக்காமலும் விவசாயிகள் பரிதவிப்பில் இருக்கிறார்கள்.