படிப்படியாக உயரும் ஜிஎஸ்டி வரி: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை போராட்டம் நடத்த முடிவு


மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் இன்று நடைபெற்ற தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் மாநில ஆலோசனை கூட்டத்தில், ஜிஎஸ்டி வரி படிப்படியாக உயர்த்தப்பட்டு வருவதை கண்டித்து விரைவில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டதாக, பேரவையின் மாநில பொதுச்செயலாளர் செளந்தர ராஜன் கூறியுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி பகுதியில் உள்ள தனியார் சொகுசு விடுதியில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் மாநில மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேரவையின் 41-வது மாநில மாநாட்டை வெற்றி மாநாடாக நடத்திய மாநிலம் மற்றும் மாவட்ட கிளை நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

பின்னர், கார்ப்பரேட் ஆன்-லைன் வர்த்தகத்தை மத்திய, மாநில அரசுகள் தடை செய்ய வேண்டும், சில்லறை வர்த்தகத்தை காப்பாற்ற வேண்டும் உள்ளிட்ட வணிகர்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து ஆலோசனை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், மாநில தலைவர் வெள்ளையன், பொதுச் செயலாளர் சௌந்தரராஜன், இளைஞரணிச் செயலாளர் சரவணன், பழைய பொருட்கள் வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயக்குமார் உள்ளிட்ட மாநிலம் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய மாநில பொதுச்செயலாளர் சௌந்தரராஜன், "தமிழகத்தில் சில்லறை வணிகத்தை அழிக்கும் வகையில், கார்ப்ரேட் ஆன்லைன் வணிகர்களுக்கு ஆதரவாக, உள்ளாட்சித் துறையில் கட்டிட உரிமையாளர் சொத்து வரி கட்டியிருந்தால்தான், உரிமத்தை புதுப்பிக்க முடியும் என்ற சட்டத்தை 2023-ம் ஆண்டு கொண்டு வந்துள்ளது தமிழக அரசு.

கஞ்சா புழக்கத்தால் வணிகர்கள் அச்சத்துடன் பணி செய்யும் நிலை உள்ளது. தமிழகத்தில் வணிகர் நலவாரியத்தை தமிழக அரசு ஏற்படுத்தியது. ஆனால், அந்த வாரியம் செயல்படாமல் உள்ளது. இவற்றை கண்டித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான மாநில நிர்வாகிகள் ஆலோசனை மாநாட்டு கூட்டம்தான் இது.

ஜிஎஸ்டி வரி விதிப்பை பொறுத்தவரையில் கடந்த 2016-ம் ஆண்டு அகில இந்திய வியாபாரிகள் சங்க கூட்டத்தில் பங்கேற்றிருந்த அமைச்சர் ராஜ்நாத் சிங், படிப்படியாக ஜிஎஸ்டி வரி குறைக்கப்படும் என தெரிவித்தார். ஆனால், படிப்படியாக ஜிஎஸ்டி வரி உயர்த்தப்பட்டு வருகிறது. அதனால், இதனை கண்டித்து விரைவில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்” என்றார்.

மாமல்லபுரத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் சார்பில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.