செங்கல்பட்டு: கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் பயனாளிகளை தேர்வு செய்ய சிறப்பு கிராம சபைக் கூட்டம்


செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 359 கிராம ஊராட்சிகளிலும் 4 ஆயிரம் பேருக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் மூலம் வீடுகள் வழங்கப்படவுள்ளது. இதற்கான பயனாளிகளை தேர்வு செய்வதற்கான சிறப்பு கிராம சபைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

தமிழக அரசு, 2024 - 25ம் ஆண்டிற்கு கலைஞரின் கனவு இல்லம் என்ற திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இதற்காக ஒரு வீட்டுக்கு ரூ.3.10 லட்சம் வீதம் வழங்க மாநிலம் முழுமைக்குமாக ரூ. 3,100 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சொந்தமாக பட்டா வைத்திருப்பவா்களுக்கு மட்டுமே இந்த திட்டம் பொருந்தும். அரசு புறம்போக்கு இடத்தில் உள்ளோருக்கு வழங்கப்பட மாட்டாது.

இத்திட்டத்தை மக்களிடையே கொண்டு சேர்க்கும் வகையில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் இன்று (செவ்வாய்க் கிழமை) நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டத்தில் 359 ஊராட்சிகளிலும் அந்தந்த ஊராட்சி மன்றத் தலைவா்கள் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது. இதில், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

இது குறித்து பேசிய ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள், "இத்திட்டத்தில் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு 4 ஆயிரம் வீடுகள் ஒதுக்கப் பட்டுள்ளது. இதில் பயன்பெற, பயனாளி குடிசை வீட்டில் வசிப்பவராக இருக்க வேண்டும். பயனாளி அல்லது பயனாளியின் குடும்ப அட்டையில் இடம் பெற்றுள்ள குடும்ப உறுப்பினா்கள் பெயரில் சொந்தமாக மனைப்பட்டா இருக்க வேண்டும். வீடு கட்ட போதிய இட வசதி அதாவது 360 சதுர அடிக்கு குறைவில்லாத இடம் இருக்க வேண்டும்.

பயனாளி தற்போது வீடு கட்ட தயாா் நிலையில் இருக்க வேண்டும். தகுதி அடிப்படையில் பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கீடு செய்யப் படும். மேலும், ஊரகப் பகுதிகளில் பல்வேறு அரசு திட்டங்களின் கீழ் கட்டப்பட்டு, தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனம் மூலம் கணக்கெடுப்பு செய்யப்பட்டுள்ள ஓட்டு வீடுகள் மற்றும் சாய்தள கான்கிரீட் வீடுகளை கொண்ட குடும்பத்தினா் இந்த திட்டத்தின் கீழ் பழுது நீக்கம் செய்வதற்கு தகுதியானவா்கள். இப்பயனாளிகளுக்கு தகுதி அடிப்படையில் வீடுகள் பழுதுநீக்கம் செய்யப்படும்” என்றனர்.