11 குடும்பத்தினர் ஊரைவிட்டு ஒதுக்கிவைப்பு: விருதுநகர் ஆட்சியரிடம் பாதிக்கப்பட்டோர் புகார்


ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்த பாதிக்கப்பட்ட பொதுமக்கள்.

விருதுநகர்: ராஜபாளையம் அருகே ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டதாக 11 குடும்பத்தினர் விருதுநகர் ஆட்சி யரை சந்தித்து முறையிட்டனர். ராஜபாளையம் அருகே உள்ள செல்லம் வடக்குத் தெருவில் குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தைச் சேர்ந்த 450 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்களது உறவின்முறைக்குச் சொந்தமாக அய்யனார் கோயில், சாவடி மற்றும் 100 கடைகள் உள்ளன. இவற்றின் மூலம் வரும் வருமானத்தில் சமுதாயப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த உறவின்முறை நிர்வாகக் குழுவில் 2,020-க்கு முன் இருந்தவர்களில் உதவி கணக்குப் பிள்ளை ரூ.25 லட்சம் கையாடல் செய்ததாக கூறப்படுகிறது. அதில், ரூ.15 லட்சத்தை அவரது குடும்பத்தினர் கொடுப்பதாக ஊரார் முன்னிலையில் ஒப்புக்கொண் டதாகவும் கூறப்படுகிறது.

மேலும், இந்த கணக்குகளை முடித்த பின்னர் நிர்வாகக் குழுவினர் விலகிக்கொள்வதாக தெரிவித்தனர். ஆனால், அதற்கு மற்ற சிலர் எதிர்ப்புத் தெரிவித்தனர். அதையடுத்து, கடந்த 2020-ல் புதிய நிர்வாகக்குழு பொறுப்புக்கு வந்தது. அன்று முதல் பழைய நிர்வாகத்தில் இருந்து வந்த குறிப்பிட்ட 11 குடும்பத்தினரை சமுதாயத்தினர் ஒதுக்கி வைத்துள்ளதாகத் தெரிகிறது.

இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட 11 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் விருதுநகர் ஆட்சியர் வீ.ப.ஜெயசீலனிடம் புகார் மனு அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது: சமுதாய உறவின்முறையில் புதிய நிர்வாகிகள் வந்ததும் பழைய நிர்வாகக் குழுவில் இருந்த எங்களை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளார்கள்.

வெண்குடைத் திருவிழா, அய்யனார் கோயில் திருவிழாவில் எங்களை பங்கேற்க அனுமதிக்கவில்லை. எங்களிடம் வரி வசூல் செய்யவில்லை. அதோடு, எங்கள் குடும்பத்தில் நடந்த திருமணம் மற்றும் துக்க நிகழ்ச்சிகள் எதிலும் மற்றவர்கள் கலந்து கொள்ளவில்லை. தொடர்ந்து அனைத்திலும் புறக் கணிக்கப்பட்டு வருவதாகத் தெரி வித்தனர்.

இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொள்ள சிவகாசி கோட்டாட்சியருக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.

x