அரூர்: அபகரிக்கப்பட்ட நிலத்தை உரியவர்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்


அரூர் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் நில அபகரிப்பை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

அரூர்: அரூர் அருகே அபகரிக்கப்பட்ட மலையாளி பழங்குடி மக்களின் நிலத்தை மீட்டு, பழங்குடி மக்களிடமே ஒப்படைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தருமபுரி மாவட்டம் அரூர் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் அன்புரோஸ் தலைமை தாங்கினார். தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநில தலைவர் டெல்லி பாபு கண்டன உரை ஆற்றினார். ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் குமார், மல்லையன் அர்ஜுனன் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.

ஆர்பாட்டத்தில், அரூர் ஒன்றியம் ஊராட்சி சிட்லிங் பகுதியில் மலையாளி பழங்குடி மக்களுக்கு அரசு வழங்கிய பட்டா நிலங்களை 40 ஆண்டுகளுக்கு முன்பு ஏமாற்றி பத்திரப் பதிவு செய்துள்ளதை ரத்து செய்து உரிமையான பழங்குடி மக்களிடமே நிலத்தை வழங்க வேண்டும். 2006 வன உரிமை சட்டப்படி ஆதிவாசி மக்களின் பூர்விக வன நிலங்களுக்கு விரைந்து பட்டா வழங்க வேண்டும். பழங்குடியின மக்களுக்கு இனச் சான்று விரைந்து வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.