நயன்தாராவுக்கு நோ... சேகர் ரெட்டி மகளுக்கு ஓகே: திருப்பதியில் வெடிக்கும் சர்ச்சை!


நயன்தாரா திருமணத்திற்கு திருப்பதி தேவஸ்தானம் அனுமதி மறுத்துள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், அதே தேதியில் சேகர் ரெட்டி மகளுக்கு திருப்பதி தேவஸ்தானத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளது.

நயன்தாரா- விக்னேஷ் சிவன் காதல் விவகாரம் குறித்து அடிக்கடி சர்ச்சைகள் எழுந்து வந்த நிலையில், அவர்களின் திருமணம் எப்போது நடக்கும் என ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய வந்திருந்த நயன்தாரா- விக்னேஷ் சிவன் ஜோடி, “ஜூன் 9-ம் தேதி திருப்பதியில் எங்களுக்கு திருமணம் நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை செய்ய வந்திருக்கின்றோம்“ என வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தனர். திருமண ஏற்பாடு குறித்து இரண்டு முறை அவர்கள் திருப்பதி தேவஸ்தானத்தில் அனுமதி கேட்டும் அவர்களுக்கு அனுமதி மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அதே தேதியில் மாமல்லபுரத்தில் திருமணம் நடைபெறும் என அவர்கள் அறிவித்தனர். சேகர் ரெட்டி மகளுக்கும் திருப்பதி தேவஸ்தான இணை செயல் அலுவலர் தர்மா ரெட்டி மகனுக்கும் அதே 9-ம் தேதி திருப்பதி தேவஸ்தானத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளது.

தமிழகத்தில் அரசியல் தொடர்பில் நடைபெறும் பல்வேறு முறைகேடுகளில் சிக்கியவர் சேகர் ரெட்டி. சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாத சேகர் ரெட்டி சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை சென்றவர். இவருக்கு சதன் ரயில்வே மஸ்தூர் யூனியன் பொதுச் செயலாளர் கண்ணையா மூலமாக திருப்பதி தேவஸ்தானத்தின் அறிமுகம் கிடைத்தது. இதையடுத்து திருப்பதி தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியதை அடுத்து, சேகர் ரெட்டி அறங்காவலர் குழு உறுப்பினர் பதவியை இழக்க நேரிட்டது. ஆளும் அதிகார மையங்களின் தொடர்பு இருந்ததால் அதே பதவியில் மீண்டும் நியமிக்கப்பட்டார் சேகர் ரெட்டி. இந்நிலையில் சேகர் ரெட்டியின் மகளுக்கும் திருப்பதி திருமலை தேவஸ்தானத்தின் இணை செயல் அலுவலரான தர்மா ரெட்டி மகனுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நாளை காலை பத்து மணிக்கு நடைபெற உள்ளது.

தர்மா ரெட்டி ஆந்திர மாநில ஆளும் கட்சிக்கு நெருக்கமானவர். இதனால் சாதாரண மத்திய அரசுப் பணியில் இருந்த இவர், ஐஏஎஸ் ரேங்க்கில் உள்ள திருப்பதி தேவஸ்தானத்திற்கு இணை செயல் அலுவலராக நியமிக்கப்பட்டார். இரண்டாண்டுகள் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், மேலும் அவருக்கு இரண்டு ஆண்டுகள் பதவி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. சர்ச்சைகள் நிறைந்த இவர் மீது திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவி வருகிறது.

இந்நிலையில் சேகர் ரெட்டி இல்ல திருமணத்திற்கு தமிழகத்திலிருந்து விஐபிக்கள் திருப்பதிக்கு படையெடுத்துள்ளனர். அதற்காக திருப்பதி தேவஸ்தானத்தில் உள்ள அனைத்து விஐபி அறைகளும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் நிச்சயதார்த்தத்திற்கு வருபவர்கள் அனைவருக்கும் சாமி தரிசனம் செய்ய விஐபி தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே பல மணிநேரம் காத்துக் கிடக்கும் சாதாரண பக்தர்கள், இன்னும் கூடுதலாக பல மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

x